Select Page

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம்

சிங்கப்பூரில் பணியிடங்களில் வாகனப் பாதுகாப்பு தொடர்பாக கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை நடந்த சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 1,79,700 டாலர் (நிறுவனங்களுக்கு) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) நேற்று புதன்கிழமை (டிசம்பர் 17) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தனது ஃபேஸ்புக் பதிவில், சிங்கப்பூர் முழுவதும் உள்ள 627 இடங்களில் 1,318 “பாதுகாப்பற்ற குறைபாடுகள்”, ஆறு சீரமைப்பு உத்தரவுகள் மற்றும் ஒரு பணிநிறுத்த உத்தரவு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

“ஆனால் இந்தக் குறைபாடுகளில் பலவற்றைத் நிர்வாகம் நினைத்திருந்தாலே தவிர்த்திருக்க முடியும்,” என்று தெரிவித்த அமைச்சகம், கட்டுமானம், போக்குவரத்து மற்றும் சேமிப்பு, உற்பத்தி, கடல்சார் மற்றும் சேவைத் துறைகள் போன்ற பல்வேறு துறைகளில் வாகனங்களை முறையாகப் பராமரிக்காதது மற்றும் பலவீனமான போக்குவரத்து மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளது. வாகனப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலாளிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நான்கு பகுதிகளை மனிதவள அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஃபோர்க்லிஃப்ட் இயக்கம், ஃபோர்க்லிஃப்ட் மாற்றங்கள், வாகனப் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகிய நான்கும் அதில் அடங்கும்.

ஃபோர்க்லிஃப்ட்களை இயக்கும் தங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்துணர்ச்சிப் பயிற்சி அளிக்கப்படுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், பயன்படுத்தப்படாத நேரங்களில் இயந்திரங்களின் சாவிகள் பூட்டி வைக்கப்பட வேண்டும். ஃபோர்க்லிஃப்ட்கள் அவற்றின் பாதுகாப்பான மற்றும் அசல் நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். அதாவது, ஃபோர்க்லிஃப்டை தயாரித்த நிறுவனம் அல்லது விநியோகஸ்தரால் வழங்கப்பட்ட பாகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனங்களுக்கான இயக்கத்திற்கு முந்தைய சரிபார்ப்புப் பட்டியல் உட்பட, ஒரு வழக்கமான பராமரிப்பு முறையைச் செயல்படுத்தவும் முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்கிறது மனிதவள அமைச்சகம்.

பணி இடங்களில் வாகனங்கள் இயக்கப்படும்போது பாதுகாப்பை உறுதிசெய்ய, முதலாளிகள் தனி பாதசாரிகள் பாதைகள் உட்பட, தெளிவான வழித்தடங்களைக் குறிக்க வேண்டும். 2025ம் ஆண்டின் முதல் பாதியில், பணியிடத்தில் ஏற்பட்ட காயங்களால் 17 பேர் உயிரிழந்தனர். 2024ம் ஆண்டைப் போலவே, வாகன விபத்துகளே இறப்புகளுக்கு முக்கிய காரணமாக இருந்தன; 2025ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இத்தகைய சம்பவங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறுகிறது மனிதவ அமைச்சகம்.

2024லில் நடந்த கோர சம்பவம்..

சிங்கப்பூரில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த லாரி கிரேன் ஆபரேட்டர், தனது மேற்பார்வையாளரின் அறிவுறுத்தலை மீறி, மற்றவர்கள் அருகில் இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்காமலும், இரும்பு தூணின் அடிப்பகுதி ஒரு பக்கத்தில் மட்டுமே ரோப் கட்டப்பட்டிருந்தது என்பதை அறிந்திருந்தும், சுமார் 4.4 டன் எடை கொண்ட ஒரு விளக்குத் தூணின் அடிப்பகுதியை தனது கிரேன் மூலம் தூக்கினார். அப்போது அதன் அடிப்பகுதி சரிந்து விழுந்து, 32 வயதுடைய ஒரு தொழிலாளி மீது மோதியது. அவர் சம்பவ இடத்திலேயே காலமானார்.

அந்த லாரி கிரேன் ஆபரேட்டரான என்ஜி லியாட் கியோங்கிற்கு கடந்த அக்டோபர் 2024-ல் ஓராண்டு மற்றும் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் ஊழியர்கள் மற்றும் நிறுவன முதலாளிகள் செய்யும் ஒரு சிறிய தவறு அல்லது அவர்களுடைய ஒரு நொடி அலட்சியம் ஒரு உயிரையே பலிவாங்கிவிடும் என்கிறது மனிதவள அமைச்சகம்.

புதுக்கோட்டை இளைஞரின் மறைவு

சில வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து வந்து சிங்கப்பூரில் Electrician பணி செய்து வந்த ஒரு இளைஞர் மின்னல் தாக்கி காலமானார். அண்மைய காலமாக மழை சிங்கப்பூரில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், அவர் தனது பணியிடத்தின் மொட்டை மாடியில் நின்று பணியாற்றிய நேரத்தில் மின்னல் தாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு இரு நாடு அரசும் அவர் உடலை சொந்த ஊர் எடுத்து செல்ல முயற்சிகள் மேற்கொண்டு அதன் பிறகு அவர் உடல் பாத்திரமாக தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது.

கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஆகாவே நிறுவன தலைவர்கள், பணியிடத்தில் கனரக வாகனங்களை இயக்குபவர்கள், அந்த வாகனங்களுக்கு அருகில் பணி செய்பவர்கள் என்று அனைவரும் மிகுந்த பாதுகாப்புடனும், பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று அரசு மற்றும் மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.