ஆஸ்திரேலிய பிரச்சனை.. சிங்கையில் எதிரொலி..
ஆஸ்திரேலியாவின் Bondi கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் சில பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சம் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. “எங்கள் பாதுகாப்பு முகமைகள் அச்சுறுத்தல் சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன,” என்று ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அந்த அமைச்சம் கூறியது.
“காவல்துறை சில குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதற்கேற்பத் தங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து சரிசெய்து வரும். ஞாயிற்றுக்கிழமை அன்று, ஹனுக்கா பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு யூத நிகழ்வின்போது, ஆஸ்திரேலியாவின் bondi கடற்கரையில் துப்பாக்கி ஏந்திய இருவர் 15 பேரைக் கொன்று, மேலும் பலரை காயப்படுத்தினர். இது கடந்த சுமார் 30 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாகும்”.
“ஆஸ்திரேலியக் காவல்துறை இந்தச் சம்பவத்தை ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக பார்க்கிறது. மேலும் இந்த கொடூர செயல்களை செய்தவர்கள் இஸ்லாமிய சித்தாந்தத்தால் தூண்டப்பட்டவர்கள் என்று அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல Bondi கடற்கரை சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அங்கு மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஐவி லீக் பள்ளியின் கட்டிடத்திற்குள் நுழைந்து, ஒருவர் அங்கு இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். காவல்துறை இன்னும் அந்தச் சந்தேக நபரைத் தேடி வருகிறது. ஆகவே இது போன்ற நேரங்களில் அந்தந்த நாடுகளில் உள்ள நமது மக்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சிங்கப்பூரை பொறுத்தவரை சில இடங்களில் ஏற்கனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களும் யாரேனும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தால் அல்லது சந்தேகம் எழுந்தாள் உடனடியாக, 1800 2626 473 என்ற எண்ணில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை (ISD) தொடர்பு கொள்ளுமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
“பயங்கரவாதத்திற்கு எந்த வடிவத்தில் ஆதரவளிப்பதையும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கடும் குற்றமாக கருதுகிறது. சிங்கப்பூரின் தேசியப் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபடும் எந்தவொரு நபரும் – அவர் வெளிநாட்டவராக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி – சட்டத்தின் கீழ் கடுமையாகக் கையாளப்படுவார்,” என்று உள்துறை அமைச்சகம் கூறியது.
மூத்த அமைச்சர் சண்முகம்..
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள சிங்கையின் மூத்த அமைச்சர் சண்முகம்… “ஆஸ்திரேலியாவில் நடந்த தாக்குதலுக்கான துல்லியமான காரணங்கள் எனக்குத் தெரியாது. ஆனால், பல நேரங்களில், “வெறுப்புப் பேச்சு” இது போன்ற கொடூரங்களுக்கு ஒரு அடிப்படை காரணமாக இருந்துள்ளது. அது வன்முறைக்கு அதிக வாய்ப்புள்ள ஒரு சூழலை உருவாக்குகிறது. எனவே, சிங்கப்பூரில் எந்தவொரு குழுவையும் குறிவைக்கும் வெறுப்புப் பேச்சையோ (மற்றும் பிற நடத்தைகளையோ) நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
முஸ்லிம்களுக்கு எதிராகவோ, யூதர்களுக்கு எதிராகவோ, கிறிஸ்தவர்களுக்கு எதிராகவோ, இந்துக்களுக்கு எதிராகவோ, எந்தவொரு மத அல்லது இனக் குழுவிற்கு எதிராகவோ ஒரு விஷயம் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால் தான வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டும் நடத்தைகள் மீது நாங்கள் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளோம். இங்கு சிங்கப்பூரில், எங்கள் சட்டங்களும் நெறிமுறைகளும் ஒரு மிக எளிய கொள்கையை பிரதிபலிக்கின்றன:
இனம் அல்லது மதம் பாராமல் அனைவரும் நியாயமாக நடத்தப்பட வேண்டும். அவர்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம் அல்லது இஸ்ரேல் மீது நமது உணர்வுகள் எப்படி இருந்தாலும், அனைத்து சிங்கப்பூரர்களும், சிங்கப்பூரில் உள்ள அனைத்து சமூகங்களும் இங்கு பாதுகாப்பாகவும் மதிக்கப்படுவதாகவும் உணர வேண்டும்” என்று கூறியுள்ளார்.