டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு..
இந்திய தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நேற்று செவ்வாயன்று பேசுகையில், “எதிர்வரும் ஒன்பது முதல் பத்து மாதங்களுக்குள் காற்றுத் தரக் குறியீட்டைக் விரைவாக குறைப்பது எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் சாத்தியமற்றது” என்று கூறினார். மேலும், நகரத்தில் நீடித்து வரும் காற்று மாசுபாட்டிற்காக மக்களிடம் மன்னிப்பு கோரிய அவர், இந்த நெருக்கடிக்கு முந்தைய ஆம் ஆத்மி கட்சி அரசாங்கமே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
Singaporeans in Delhi… Government issues a warning… Wong’s post causes a stir!
அதே நேரம் தற்போதைய அரசாங்கம் ‘மாசு என்ற நோயை’ மரபுரிமையாகப் பெற்றுள்ளது என்றும், அதைச் சரிசெய்ய தினசரி பணியாற்றி வருவதாகவும் சிர்சா கூறினார். “டெல்லியில் நிலவும் மாசிற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நேர்மையற்ற ஆம் ஆத்மி அரசாங்கத்தை விட நாங்கள் சிறப்பாகப் பணியாற்றுகிறோம். மேலும் ஒவ்வொரு நாளும் காற்றின் தரக் குறியீட்டைக் குறைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார். மேலும், காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சீரழிவை அவ்வளவு குறுகிய காலத்தில் மாற்றிவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, புது டெல்லியில் மாலை 4 மணியளவில் காற்றின் தரக் குறியீடு (AQI) 354 ஆகப் பதிவாகியுள்ளது. அதே திங்கட்கிழமை 427 என்ற அளவிற்கு காற்றின் தரக் குறியீடு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இக்கட்டான சூழலில் கடந்த டிசம்பர் 15ம் தேதி திங்களன்று ஒரு அறிவிப்பை இந்தியாவில் உள்ள நமது சிங்கை உயர் கமிஷன் வெளியிட்டது. அதில் “டெல்லியில் காற்றின் அளவு 437 என்ற அபாய நிலையில் உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் குறிப்பாக சுவாச மற்றும் இருதய நோய் உள்ளவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும். அப்படி சென்றாலும் கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். மேலும் அங்குள்ள சிங்கப்பூர் மக்கள், இந்திய அரசு சொல்லும் எச்சரிக்கைகளை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்றும்” கூறியிருந்தது.
உயர் கமிஷ்னர் சைமன் வோங் போட்ட ட்வீட்..!
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கான சிங்கப்பூர் உயர் கமிஷ்னர் சைமன் வோங் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. சிங்கப்பூரில் தெளிவான வானத்தின் கீழ் அவர் நிற்பது போல ஒரு போட்டோ போட்டு அதில் “Break. Free. Deep. Breath. Wish. Pray. Better. 2026. – HC Wong” என்று பதிவிட்டிருந்தார். அவர் டெல்லியில் இருந்து சிங்கை திரும்பிய நிலையில் இந்த பதிவை வெளியிட்டிருந்தார். ஆனால் இணையத்தில் இந்த பதிவு வெளியானதும் Deep.. Breath என்ற வரிகளை டெல்லியில் உள்ள மாசுபாட்டை தான் அவர் குத்திக்காட்டி பேசியுள்ளார் என்று இணையவாசிகள் கமெண்ட் செய்ய துவங்கினர். ஆனால் வோங் அதற்கு எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் இன்றைய நிலை..
இந்தியாவின் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, தேசிய தலைநகரான டெல்லியில் இன்று புதன்கிழமை காலை காற்றின் தரத்தில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. காலை 8 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 328 ஆகப் பதிவு செய்யப்பட்டு, இது கடந்த சில நாட்களைவிட குறைவு என்றாலும் அது இப்போது ‘மிகவும் மோசமான’ AQI நிலையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோசமடைந்து வரும் இந்த வானிலை வான்வழி பயணத்தையும் பாதித்தது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, இண்டிகோ நிறுவனம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டது. அதில் இன்று புதன்கிழமை காலை குறைந்த பார்வைத் தெளிவு மற்றும் விமானச் செயல்பாடுகளில் ஏற்படும் தாமதம் குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வட மற்றும் கிழக்கு இந்தியாவில் நிலவும் மூடுபனி காரணமாக விமான அட்டவணையில் தாமதங்கள் அல்லது மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்தது.
சாலைப் போக்குவரத்தும் மெதுவாகச் செல்லக்கூடும் என்று எச்சரித்த அது, பயணிகள் விமான நிலையத்தை அடைய கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறும், புறப்படுவதற்கு முன் விமான நிலவரம் குறித்த தகவல்களைச் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தியது. முன்னதாக, தேசிய தலைநகரில் வாகனப் புகைக் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா அறிவித்தார். ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வரும் டிசம்பர் 18 முதல், செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUCC) இல்லாத வாகனங்களுக்கு டெல்லியில் உள்ள பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வழங்கப்படாது என்று அமைச்சர் தெரிவித்தார்.