சிங்கப்பூரில் தங்களிடம் பணியாற்றும் வெளிநாட்டு வீட்டு பணிப்பெண்களுக்கு மாதம் ஒரு முறை ஓய்வு அளிக்க வேண்டும் என்கின்ற சிங்கப்பூர் அரசின் சட்டத்தை மீறும் சுமார் 90க்கும் அதிகமான முதலாளிகளை தண்டித்து வருவதாக மனிதவள அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
Singapore “rest day for migrant workers” – MOM says around 90 employers are penalised every year.
MDW என்று அழைக்கப்படும் (Migrant Domestic Workers) வெளிநாட்டிலிருந்து வீட்டு பணிப்பெண்களாக சிங்கப்பூர் வருபவர்களுக்கு கட்டாயம் மாதத்திற்கு ஒரு முறை ஓய்வு வழங்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மனிதவள அமைச்சகம் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்தை மீறி ஆண்டுதோறும் சுமார் 90க்கும் மேற்பட்ட முதலாளிகளை நாங்கள் தண்டித்து வருகிறோம் என்று கூறி இருக்கிறது மனித வள அமைச்சகம். இங்கு பணியாற்றும் வெளிநாட்டு பணிப்பெண்களுடைய மன மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2023 ஆம் ஆண்டு தான் இந்த புதிய நடைமுறையானது அமலுக்கு வந்தது.
அதன்படி சிங்கப்பூருக்கு பணியாற்றவரும் ஒரு புலம்பெயர்ந்த வீட்டு பணிப்பெண் மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டும். அதே நேரம் இந்த ஒரு நாளையும் ஈடு செய்யும் வகையில் அவருக்கு பணமாக வழங்க கூடாது என்றும் அரசு தன்னுடைய அரசாணையில் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நேற்று மே 5ம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளித்த நமது மனிதவள அமைச்சகர் டாக்டர் டான் சீ லெங் எழுத்துப்பூர்வமாக தன்னுடைய பதிலை அளித்தார். அதில் அரசு குறிப்பிட்ட அந்த ஒரு நாள் ஓய்வு என்பதை புறக்கணித்து அந்த ஒரு நாளிலும் வீட்டு பணிப்பெண்களை வேலை செய்ய வைத்து அதற்கு ஈடாக பணம் கொடுத்த முதலாளிகளுக்கு வேலை வாய்ப்பு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
அதிகபட்சமாக அவர்களுக்கு 10,000 வெள்ளி அபராதம் முதல் ஓராண்டு சிறை தண்டனை வரையிலும் அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட்ட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார். West Coast Jurong West GRC நாடாளுமன்ற உறுப்பினரான ரசாக் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் டான், சிங்கப்பூரை பொறுத்தவரை இங்குள்ள பெரும்பாலான முதலாளிகள் 2023 ஆம் ஆண்டு மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அந்த ஒரு சட்டத்தை சரியாக மதித்து வருவதாகவும், ஒரு சில முதலாளிகள் மட்டுமே அதில் பிரச்சனை செய்து வருவதாகவும் கூறினார். அதே நேரம் 2025 ஆம் ஆண்டு கணக்கின்படி சிங்கப்பூரில் தற்பொழுது மொத்தமாக 3,16,900 வீட்டு பணிப்பெண்கள் உள்ளார்கள், அதன் அடிப்படையில் பார்த்தால் ஒரு சதவீதத்திற்கும் குறைவான முதலாளிகள் மட்டுமே இந்த விதிகளை மீறுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மற்றபடி அனைத்து முதலாளிகளும் தங்களிடம் பணியாற்றும் பணிப்பெண்களுக்கு மாதம் ஒருமுறை விடுமுறை என்கின்ற விதியை சரியாக பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
மனிதவள அமைச்சகத்தின் சட்டம் இதுதான்.
சிங்கப்பூரில் பணியாற்றும் ஒரு வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு வாரம்தோறும் ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும். ஆனால் அந்த பணிப்பெண் வாரம் ஒரு முறை தனக்கு வழங்கப்படும் ஓய்வை எடுக்காமல் இருக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அப்படி வாரம் ஒரு முறையும் அவர் ஓய்வு எடுக்காமல் பணி செய்தால் அன்றைய தினத்திற்கான சம்பளத்தை கட்டாயம் அந்த முதலாளி வழங்க வேண்டும். ஆனால் இதுவே மாதாந்திர கட்டாய விடுமுறை என்று வரும் பொழுது அதை அந்த பணிப்பெண் வேலை செய்து பணமாக ஈட்ட முடியாது. அந்த முதலாளியும் அதற்கு அனுமதிக்க கூடாது. ஆகவே கட்டாயம் அந்த பணிப்பெண் தனக்கு மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஒரு ஓய்வு நாளை எடுத்தே ஆக வேண்டும் அந்த முதலாளியும் மாதம் ஒரு நாள் அவருக்கு ஓய்வு வழங்கியே ஆகா வேண்டும்.