சிங்கப்பூரில் Telegram மூலம் தனக்கு அறிமுகமான ஒரு நபரின் பேச்சைக் கேட்டு, ஒரு வீட்டை வெளி பக்கமாக பூட்டி அதற்கு தீ வைத்த மலேசியரான 33 வயது நபர் நேற்று மே 4ம் தேதி தன்னுடைய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் சில பல மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவரது வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் அண்மையில் அரங்கேறியது. அதுவும் அந்த தீ வைக்கப்பட்ட வீட்டில் 41 வயது சிங்கப்பூரரும், அவருடைய மனைவி, இரண்டு குழந்தைகள், தங்கை மற்றும் பெற்றோருடன் இருந்த நிலையில் அந்த 33 வயது மலேசியரான வேலுப்பிள்ளை சிவகுமார் அந்த வீட்டை வெளிப்புறமாக பூட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார். அந்த வீட்டிற்குள் இருந்த அந்த 41 வயது சிங்கப்பூரார் பலரிடம் பணம் பெற்று அதை திருப்பி தராமல் கடனில் இருந்ததாகவும், பலரை ஏமாற்றியதால் அவரால் ஏமாற்றப்பட்ட ஒருவர் தான் சிவகுமாரை இப்படி செய்ய தூண்டியதாகவும் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.
பெயர் குறிப்பிடப்படாத அந்த 41 வயது சிங்கப்பூரர் ஏற்கனவே பலரிடம் கடன் பெற்று அதை திரும்பத் தராமல் ஏமாற்றி வந்ததாகவும், பலமுறை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை வட்டியுடன் திருப்பி கேட்ட பொழுது அதற்கு அவர் எந்தவித பதிலும் சொல்லாமல் இருந்த நிலையில், ஏற்கனவே அவருக்கு பல மிரட்டல்கள் வந்திருக்கிறது. இந்த சூழலில் நான் சிவகுமார் இந்த வழக்கில் சிக்கி இருக்கிறார். மலேசியரான சிவகுமார் ஜோகர் பாஹ்ருவில் வசித்து வருகிறார், கடந்த 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சிவகுமாருக்கு கடும் பணம் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
அப்பொழுது இணைய வழியாக ஏதாவது வேலை கிடைக்குமா என்று அவர் தேடி வந்திருக்கிறார். இந்த சூழலில் தான் டெலிகிராம் மூலம் அவருக்கு ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார். அந்த நபர், நான் சொல்லும் வீட்டிற்கு நீ தீ வைத்தால் போதும் 2,500 வெள்ளி வரை உனக்கு பணம் தருகிறேன் என்று சிவக்குமாரிடம் பேரம் பேசி அதற்காக 400 வெள்ளி முன்பணமும் பெற்று இருக்கிறார். இதனை அடுத்து கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி அதிகாலை ஜோகர் பாஹ்ருவில் இருந்து சிங்கப்பூர் வந்த சிவகுமார் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இருக்கும் பெட்ரோலை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு மாற்றி இருக்கிறார். அதன் பிறகு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் தன்னுடைய முகம் தெரியாமல் இருக்க முகமூடி ஒன்றை அணிந்துண்டு குடை ஒன்றி பிடித்துக் கொண்டு பாதிக்கப்பட்ட அந்த நபருடைய வீட்டினருகில் சென்றிருக்கிறார்.
அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் அந்த வீட்டில் உள்ளே இருப்பவர்கள் வெளியே வர முடியாத வண்ணம் ஒரு சைக்கிள் பூட்டு ஒன்றை வைத்து அந்த கதவை வெளிப்பக்கமாக பூட்டியுள்ளார். அதன் பிறகு தான் பாட்டிலில் எடுத்து வந்த பெட்ரோலை வீட்டின் முகப்பினும் வெளியே கிடந்த காலணிகள் மீதும் ஊற்றி தீபற்ற வைத்திருக்கிறார். தீ வேகமாக பரவியதை கண்ட சிவகுமார் அதிர்ச்சி அடைந்து பின்வாங்கி, எரியும் கதவுகளை புகைப்படம் எடுத்து தன்னை இந்த செயலை செய்ய சொன்னவருக்கு அனுப்பியுள்ளார்.
அதிகாலை 4.30 மணிக்கு ஏதோ எரிகின்ற வாடை தெரிந்து எழுந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே குடிமை தற்காப்பு படைக்கு போன் செய்திருக்கின்றனர். அவர்கள் உடனடியாக வந்து அந்த தீயை அணைத்து வீட்டில் இருந்த அனைவரையும் காயம் இன்றி பத்திரமாக மீட்டனர். ஆனால் இந்த கதவு மற்றும் டிஜிட்டல் பூட்டுகள் சேதம் அடைந்ததில் அதை சரி செய்ய தனக்கு 4000 வெள்ளி செலவு ஆனதாக அந்த பாதிக்கப்பட்ட நபர் கூறியிருக்கிறார். சம்பவத்திற்கு பிறகு மலேசியாவிற்கு தப்பிச் சென்ற சிவகுமார் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து மலேசிய போலீசாரிடம் சரணடைந்தார்.
பின்னர் அவர் சிங்கப்பூர் காவல் துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சூழலில் நேற்று மே 4ம் தேதி நடந்த இந்த வழக்கு குறித்த விசாரணையில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்ட சிவகுமாருக்கு வருகின்ற மே மாதம் 22ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.