நமது சிங்கப்பூர் கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு அருகே உள்ள கடல் பகுதியில் ஒரு மிகப்பெரிய நில மீட்பு திட்டத்திற்கான துவக்க பணிகளை விரைவில் தொடங்க உள்ளது. “Long Island” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நில மீட்பு திட்டத்திற்கு மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் என்பது மிகச் சிறிய நிலப்பரப்பை கொண்ட ஒரு நாடு என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் மக்களின் வசதிக்காக கடந்த பல ஆண்டுகளாகவே நில மீட்பு பணியில் நமது சிங்கப்பூர் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடல் பகுதியில் இருக்கும் நிலங்களை மீட்டு அதில் மக்களுக்கான நலத்திட்ட பணிகளை துவங்கும் ஒரு திட்டத்தின் சிறு பகுதிதான் இந்த “Long Island” திட்டம். அதே நேரம் இந்த நில மீட்பு திட்டங்களால் நீர்நிலைகள் பாதிக்காத வண்ணம் வளர்ச்சி திட்டங்களை சிங்கப்பூர் ஏற்படுத்தி வருவது தான் இதனுடைய உச்சகட்ட சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

A “mini Singapore” across 2,000 acres – Government plans to begin preparatory work for the Long Island project.

Long Island

“Long Island” நில மீட்பு திட்டத்திற்கான ஆயத்த பணிகள் விரைவில் சிங்கப்பூர் அரசால் தொடங்கப்பட உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில இடைவெளிகளில் அப்பகுதியின் நீர் நிலைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பணிகள் துவங்கப்படும் என்று சிங்கப்பூரின் நகர்ப்புற மறு சீரமைப்பு ஆணையம் நேற்று மார்ச் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறது. கடல் பரப்பில் உள்ள தடைகளை அகற்றுதல் மற்றும் இந்த “Long Island” பணிக்கு தேவையான கட்டுமான பொருட்களை அங்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகள் தற்பொழுது துவங்கப்பட உள்ளன. அதே நேரம் இப்பகுதிக்கு வந்து செல்லும் மக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக இந்த “Long Island” பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று நகர்புற மறு சீரமைப்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தின் நோக்கம் மற்றும் முக்கிய அம்சங்கள்.

முன்பே கூறியதைப் போல சிங்கப்பூர் நிலப்பரப்பின் அளவில் மிகவும் சிறிய நாடு என்றாலும், இது நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு நாடு. அதனால் கடல் மட்ட உயர்விலிருந்து சிங்கப்பூரை பாதுகாக்க தான் இந்த “Long Island” பணி மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த நில மீட்பு பணிகளை இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் விரைந்து முடிக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த “Long Island” திட்டத்தின் மூலம் மீட்கப்படவுள்ள மூன்று நிலப்பகுதிகள் கூட்டாக மெரினா பகுதியை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் இது தானா மேரா முதல் மெரினா ஈஸ்ட் வரை நீண்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் சில ஆண்டுகளில் இந்த திட்டம் முடிவடையும் பொழுது சிங்கப்பூருக்கு என புதிதாக சுமார் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பு உருவாகும் என்றும், அதில் புதிய வீடுகள் புதிய நீர்த்தேக்க வசதிகள் மற்றும் சுமார் 20 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர்முனை பூங்காக்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் இந்தத் திட்டத்திற்கு கிழக்கு கடற்கரை பூங்கா பகுதியை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்ற கேள்வி பலருக்கு எழலாம், அரசு அதற்கான பதிலையும் நேற்றைய அறிக்கையில் கொடுத்திருக்கிறது. கிழக்கு கடற்கரை பூங்கா பகுதி என்பது கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் உள்ளதால் இன்னும் சில ஆண்டுகளில் கடல் மட்டம் உயரும்பொழுது கிழக்கு கடற்கரை பூங்கா பகுதி இன்னும் நீருக்கு அருகே செல்லும் என்பதால் அதனை மீட்டெடுப்பது மிகவும் அவசியமாகிறது.

அதனால் இப்போது இந்த “Long Island” பணி கிழக்கு கடற்கரை பூங்கா பகுதியில் செயல்படுத்த உள்ளது. இதற்காக நிலத்தடி மற்றும் கடல் பரப்பு நிலையை ஆராய துளையிட்டு மண் மாதிரிகளை சோதிக்கும் பணிகள் வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்பொழுது கடல் சார்ந்த உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்குதலும் மெரினா நீர் தேக்கம் போன்ற நீர் விளையாட்டுகளை பாதிக்காமல் இருப்பது போன்ற சில ஆலோசனைகளை மக்கள் வழங்கி உள்ளனர். ஆகவே மக்களின் ஆலோசனைகளை கேட்டு இந்த திட்டம் விரைவில் சீர் செய்யப்படும் என்றும் சிங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.