சிங்கப்பூரில் தமிழ் ஒரு துடிப்பான மொழியாக தொடர்ந்து நிலை நிறுத்தப்படுவதை உறுதி செய்வோம் என்றும், தமிழ் மொழியை பேணி பாதுகாக்க இந்த ஆண்டு முதல் இன்னும் பல சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நமது அதிபர் தர்மன் சண்முகரத்தினம் நேற்று மார்ச் 29ஆம் தேதி நடந்த “தமிழ் மொழி விழாவின்” துவக்க நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். வருகின்ற ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வரை இந்த விழாவானது கோலாகலமாக சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.

In Singapore – Tamil Language Festival steps into its 20th year with a fresh new look.

20வது ஆண்டில் தமிழ் மொழி திருவிழா..

தமிழ் மொழி விழா கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகவும், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நீடிக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மார்ச் 29ஆம் தேதி நமது சிங்கப்பூரில் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு “ஈடுபாடு” என்கின்ற மையக்கருத்தை கொண்டு இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெற இருக்கும் இந்த கோலாகல திருவிழாவில் மொத்தமாக 43 முக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழர்களின் பாரம்பரிய கலைகள், பண்பாடு மற்றும் இலக்கியத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நிகழ்ச்சிகளாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன அம்சங்களை தமிழ் மொழி கற்றலில் புகுத்த சிங்கப்பூர் முடிவு செய்திருக்கிறது. இது வளர்ந்து வரும் இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் மொழி கற்றல் வளர்ச்சி குழு

முன்பே கூறியதைப் போல தமிழ் மொழி விழாவின் 20-வது ஆண்டு கொண்டாட்டங்களை குறிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஏற்கனவே சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த “தமிழ் மொழி கற்றல் வளர்ச்சி குழு” இனி “வளர்தமிழ் இயக்கம்” என்கின்ற புது பெயர் மற்றும் லோகோவுடன் செயல்படும் என்றும் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்திருக்கிறார். இந்த புதிய Logo-வானது சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் நடுவில் தமிழ் என்ற எழுத்துடன் ஆலமரத்தின் உருவத்தைக் கொண்டு அதன் ஆழமான வேர்களை போல தமிழும் வேரூன்றி வளர வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் தமிழ் பேசும் குடும்பங்களில் எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் தினேஷ் அவர்கள் நமது சிங்கப்பூர் இளைஞர்களிடையே தமிழை புழக்கத்திற்கு கொண்டு வருவது மிக மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளதாகவும் கூறினார்.

டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் இளைஞர்களுடன் தமிழை இன்னும் அதிகமாக, நெருக்கமாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தினேஷ் கூறினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே தமிழ் மொழி விழாவில் இளைஞர்களாகவும், மாணவர்களாகவும் பங்கேற்ற பலர் இன்று அதே சமூக அமைப்பின் தலைவர்களாக வளர்ந்து இருப்பதை சுட்டிக்காட்டி பெருமைப்பட்டார் அதிபர் தர்மன் சண்முகரத்தினம். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்வதைப் போல தங்களுடைய அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இருக்கும் தமிழை, பல நூற்றாண்டுகளாக தங்கள் சிங்கையின் வேர்களுடன் இணைக்கப்பட்டுள்ள தமிழை ஒருபோதும் வீழ்ச்சி அடைய விடமாட்டோம். தொடர்ந்து இளைஞர்கள் மத்தியிலும் குடும்பங்களிலும் தமிழை ஆழமாக இணைக்க உழைப்போம் என்று உறுதி அளித்திருக்கிறது சிங்கப்பூர் அரசு.