முழுக்க முழுக்க மனித சக்தியை மீறி பல புதிய சக்திகளில் இந்த உலகம் இயங்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தொழிற்சாலைகளில் உள்ள உற்பத்தி பிரிவுகளிலும், நுட்பமான பணிகளை செய்ய வேண்டிய இடங்களிலும், மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனிக்கும் இடங்களிலும் இப்பொழுது ரோபோக்கள் மெல்ல மெல்ல செயல்பட தொடங்கி வருகிறது. இந்த சூழலில் நமது சிங்கியை தளமாகக் கொண்ட “ஷார்ப்பா” என்கின்ற நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனமான Nvidia மற்றும் சீனாவின் ரோபோ தயாரிப்பு நிறுவனமான Unitree நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதாவது துல்லியமான கை அசைவுகள் தேவைப்படும் பணிகளில் நமது சிங்கப்பூர் நிறுவனமான “ஷார்ப்பா” தனது “ரோபோ கை” பணிகளை மேற்கொள்ள உள்ளது. உதாரணமாக ஒரு கணினியை பொருத்துவது அல்லது நோயாளிக்கு குளுக்கோஸ் ஊசி போடுவது போன்ற மிக துல்லியமான கை அசைவுகள் தேவைப்படும் மிக மிக கடினமான வேலைகளை செய்ய ரோபோக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் ரோபோக்களின் மூளைகளுக்கு பயிற்சி அளிக்க மேலும் அவற்றை மெருகேற்ற 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மனித உருவிலான ரோபோக்களை அறிமுகப்படுத்த தற்பொழுது இந்த மூன்று நிறுவனங்களும் கூட்டு முயற்சியில் இறங்கி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு தைப்பே நாட்டில் நடைபெற்ற ஆசிய அளவிலான மிக மிகப் பெரிய தொழில் நுட்ப கண்காட்சியான Computex என்கின்ற நிகழ்ச்சியில் தான் இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் நேற்று ஜூன் 1ம் தேதி Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹூ வாங் பேசுகையில் “இந்த கூட்டணி நிச்சயம் ஒரு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக மாறும்” என்று அறிவித்தார். மனித உருவ ரோபோக்கள் உலகின் மிகப்பெரிய தொழில் துறைகளுக்கு மாபெரும் உதவியாக அமையும் என்றும், Physical AI என்று அழைக்கப்படும் இயற்பியல் செயற்கை நுண்ணறிவு இதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்றும் அவர் கூறினார்.
மேலும் நாங்கள் தயாரிக்க உள்ள “Nvidia Isaac GROOT Refrence Humanoid Robot” அல்லது “H2Plus” என்று அழைக்கப்படும் இந்த மனித உருவிலான ரோபோக்களில், சிங்கப்பூர் “ஷார்ப்பா” நிறுவனத்தின் 22-degress-of-freedom என்ற ரோபோ கைகள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இது மனித கை அசைவுகள் மற்றும் அதில் ஏற்படும் தொடு உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நமது சிங்கப்பூரை தலைமையாகக் கொண்ட ஷார்ப்பா நிறுவனத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கூட்டணி திட்டமாக இந்த h2plus திட்டம் பார்க்கப்படுகிறது.
இந்த புதிய திட்டம் குறித்து பேசிய என் Nvidia நிறுவனத்தின் மற்றொரு தலைமை அதிகாரி, “தற்பொழுது வேகமாக நகர்ந்து வரும் உலகிற்கு இது மிகவும் தேவைப்படும் ஒரு தொழில்நுட்பம், ஏனென்றால் மனித உருவிலான ரோபோ மற்றும் அதனுடைய மூளை என்பது இந்த உலகத்தை புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் நிஜ உலகில் வெவ்வேறு செயல்களை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்க்க ஒரு சிறந்த தருணமாக இருக்கும். ஒரு ரோபோவின் கற்றலை நிஜ உலக பணிகளுக்கு மாற்றி அமைக்க தேவையான தரவுகளையும் இயற்பியல் சார்ந்த பின்னூட்டங்களையும் இந்த கைகள் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்குகின்றன என்றார் அவர்.
