சிங்கப்பூரில் மனிதவள அமைச்சகத்திடம் போலியான பணி அனுமதி விண்ணப்பங்களை சமர்ப்பித்து. அதே நேரம் சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் இடமிருந்து சட்டவிரோதமாக லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகாரில் இரண்டு சிங்கப்பூரர்கள் மற்றும் ஒரு வேலை வாய்ப்பு ஏஜென்சி மீது நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த வழக்கில் வேலை வாய்ப்பு ஏஜென்சியில் பணியாற்றி வந்த 43 வயது Zhao Yanxiao என்ற நபர் மசாஜ் நிலையம் ஒன்றின் மேலாளர் ஆன 58 வயதுடைய Hu Yuping மற்றும் “ஒன்டர்புல் ஏஜென்சி” என்கின்ற முகமையும் தற்பொழுது விசாரணை வட்டாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த குற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. Traditional Source Occupation List – NTS – OL என்ற வழக்கமான திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 14 Work Pass அனுமதி விண்ணப்பங்களில் மேற்கூறிய ஜாவ் (ZHao) என்ற நபர் போலியான தகவல்களை கொடுத்ததாக மனிதவள் அமைச்சரத்தின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த விண்ணப்பங்களில் அந்த 14 தொழிலாளர்கள் உணவு பதப்படுத்தும் தொழிலாளர்களாக சிங்கப்பூரில் வேலை செய்வார்கள் என்று குறிப்பிடப்பட்டு, அவர்களுக்கு மாதம் 2000 வெள்ளி சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் அந்த 14 தொழிலாளர்கள் மசாஜ் நிலையங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஸ்பா போன்ற அமைப்புகளில் உணவு சாரா பணிகளை செய்து வந்ததாகவும். மேலும் அவர்களுக்கு விண்ணப்பத்தில் அறிவிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது. மேலும் அந்த வெளிநாட்டு ஊழியர்களிடம் அவ்விரு சிங்கப்பூரர்களும், அந்த சிங்கப்பூர் ஏஜென்சியும் லஞ்சம் பெற்றதாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அதே நேரம் ஒரு வெளிநாட்டு ஊழியரை மசாஜ் செய்பவராக பணியமர்த்தப்பட்ட நிலையில் அவரை உணவு பதப்படுத்தும் தொழிலாளியாக போலியான ஆவணங்கள் கொடுத்து, மேலும் அவருக்கு 2000 வெள்ளி மாத சம்பளம் என்று போலியான தகவலை கொடுத்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தொழிலாளர்கள் இடமும் கிட்டத்தட்ட 500 வெள்ளி லஞ்சமாக பெற்றதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
தற்பொழுது ஜாவ் மீது வேலைவாய்ப்பு தொடர்பான போலி ஆவணங்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டுகளும், சம்பளம் தொடர்பான போலியான தகவல்களை வழங்கியதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் தற்போது சுமத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு மனிதவள வேலை வாய்ப்பு சட்டத்தின் கீழ் இங்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களுடைய பணி அனுமதி பத்திரங்களில் போலியான தகவல்களை வெளியிடுவது நிரூபிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 20,000 வெள்ளி வரை அபராதம் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அவை இரண்டும் கூட விதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதே நேரம் குற்றவாளியாக அறிவிக்கப்படும் நபர்களோ அல்லது நிறுவனங்களோ மேற்கொண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூருக்கு அமர்த்துவதில் இருந்து நிரந்தரமாக தடை செய்யப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. அதே நேரம் சிங்கப்பூருக்கு வேலைக்காக வரும் வெளிநாட்டு ஊழியர்களிடம் சட்ட விரோதமாக பணம் அல்லது லஞ்சம் வாங்கும் குற்றத்திற்காக 30,000 வரை அபராதம் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அவை இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
