அண்மையில் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் ஒரு மிக முக்கிய தகவலை வெளியிட்டது, அதில் இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் உள்நாட்டு ஊழியர்களை அழைத்துச் செல்லும் பொழுது கூண்டு வைத்த லாரிகளில் அழைத்துச் செல்லக்கூடாது என்றும், இதனால் விபத்து ஏற்படும் பொழுது உடனடியாக அதிலிருந்து ஊழியர்கள் தப்பிக்க முடியாமல் போகலாம் என்றும் மனிதவள அமைச்சகம் எச்சரித்தது. கூடுதலாக இந்த கூண்டு வைத்த லாரிகளை வருகின்ற 2027 ஜனவரி 1ம் தேதிக்குள் முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் கூண்டு வைத்த லாரிகளுக்கு விதிக்கப்படும் தடை ஒரு சில நிறுவனங்களை பாதிக்கலாம் என்று சிலர் தங்கள் கவலைகளை முன்வைத்துள்ளனர்.
Singapore bans cage trucks used to transport workers – Some companies express dissatisfaction.
கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி போக்குவரத்து அமைச்சகத்தின் பட்ஜெட் விவாதம் நமது நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது விபத்து அல்லது தீ விபத்து ஏற்படும் சமயங்களில் வெளிப்புறமாக பூட்டப்பட்ட அல்லது தாழிடப்பட்ட கூண்டுகளைக் கொண்டு இயங்கும் லாரிகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டால் அதனுள் இருக்கும் தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் போகலாம், சில நேரங்களில் அவர்களுடைய உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்று வாதிடப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிங்கபூர் நிலப் போக்குவரத்து ஆணையம் சிங்கப்பூரில் உள்ள சுமார் 50,000 லாரிகளில் ஒன்று முதல் இரண்டு சதவீத லாரிகளில் மட்டுமே இந்த கூண்டு வசதி இருக்கிறது என்றும், ஆகையால் இதனை அப்புறப்படுத்துவது பெரிய பிரச்சினையாக இருக்காது என்றும் கூறியது.
மேலும் இதை மாற்றுவது குறித்து கவலை தெரிவித்துள்ள சிறு சிறு நிறுவனங்களுக்கு பதில் அளித்துள்ள நிலப் போக்குவரத்து ஆணையம் “குறைந்த அளவிலான லாரிகளில் மட்டுமே இந்த கூண்டு போன்ற அமைப்பு இருப்பதால் அவற்றை மாற்றுவது எந்த நிறுவனங்களையும் பாதிக்காது என்றும், அதே நேரம் அந்த கூண்டு போட்ட வண்டிகளை மாற்றாமல் அப்படியே அதை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த அனுமதி அளித்திருப்பதாகவும்” கூறியுள்ளது. அதே நேரம் கூண்டு உள்ள வண்டிகளில் மாற்றங்களை செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு ஒரு வாகனத்திற்கு 600 வெள்ளி வரை செலவிட நேரிடும் என்றும் நில போக்குவரத்து ஆணையும் ஒப்புக்கொண்டுள்ளது.
தொழிலாளர்களின் கருத்து..!
இந்த கூண்டு போட்ட லாரிகளை அப்புறப்படுத்துவது குறித்து இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழகத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் செல்லையா ராம்குமார் போன்ற ஊழியர்கள் தங்கள் அனுபவங்களை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டனர். முன்பு கூண்டு வைத்த லாரிகளில் சென்ற பொழுது எங்களோடு சேர்த்து சில விளைவு உயர்ந்த கருவிகளையும் நாங்கள் எடுத்துச் செல்வோம், அப்படி செல்லும் பொழுது அந்த கருவிகள் வைக்கப்பட்டு மீதமிருக்கும் குறுகிய இடத்திலேயே நாங்கள் அமர்ந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. அது எங்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியது என்று அவர்கள் கூறியிருக்கின்றனர் ஆகவே மனிதவள அமைச்சகம் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மனித உரிமை அமைப்புகளின் கருத்து..!
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக செயல்பட்டு வரும் HOME போன்ற சில தன்னார்வல அமைப்புகள் இந்த தடையை வரவேற்றாலும் இது ஒரு மிகச் சிறிய முன்னேற்றம் மட்டுமே இன்று கருதுகின்றனர். லாரிகளின் பின்னால் தொழிலாளர்களை ஏற்றி செல்வதையே ஒட்டுமொத்தமாக பாதுகாப்பற்ற முறையாக தாங்கள் கருதுவதாகவும், தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல பேருந்துகள் போன்ற பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் அரசு இது குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே யோசித்து வருவதாகவும், உடனடியாக பேருந்து போன்ற மாற்றுப் போக்குவரத்திற்கு மாறும்பொழுது அதற்கு ஆகும் செலவுகளை சிறு குறு நிறுவனங்களால் தாங்க முடியாது என்றும் அரசு கூறியுள்ளது. இருப்பினும் இதற்கு ஒரு நல்ல தீர்வை விரைவில் காண்போம் என்றும் அரசு உறுதி அளித்திருக்கிறது.