மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலால் சிக்கித் தவித்த சிங்கப்பூர் குடியிருப்பாளர்களை சுமந்து வந்த முதல் விமானம் இன்று (மார்ச் 5) காலை துபாயிலிருந்து புறப்பட்டு பத்திரமாக சிங்கை சாங்கியில் தரையிறங்கியது. அவர்களது குடும்பங்கள் சாங்கி விமான நிலையத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை கண்ணீர் மல்க வரவேற்றனர். எமிரேட்ஸ் விமானம் EK314 நேற்று புதன்கிழமை (மார்ச் 4) உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் துபாயிலிருந்து புறப்பட்டு இன்று மார்ச் 5ம் தேதி காலை 8:15 மணிக்குப் பிறகு சிங்கப்பூரில் தரையிறங்கியது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான பகைமைகளைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பரவலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த இக்கட்டான பயணம் அரங்கேறியுள்ளது. இந்த பிரச்சனையால் இன்னும் பல நாடுகள் தங்கள் எல்லையை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
War tensions – Emotional scenes at Singapore Changi as families thank the government.
முதலில் இந்த போர் மூண்ட நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே இயங்கும் என்று விமான நிறுவனங்கள் முன்னதாக அறிவித்திருந்தன, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை பல விமானங்களை ரத்து செய்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல நாட்கள் குண்டு முழக்கம் மற்றும் ஏவுகணைகளை கண்டு அஞ்சிய மக்கள், நிம்மதியாக சிங்கை மண்ணில் காலெடுத்து வைத்த தருணம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு திரும்பியவர்களில் சிங்கையின் மனிதாபிமான அமைப்பான மெர்சி ரிலீஃப்-இன் குழு உறுப்பினரான முகமது ஹபீஸ் பின் நூராஹ்மானும் ஒருவர். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தீவிரமடைந்தபோது, அந்தப் பகுதியில் உதவிப் பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹபீஸ், தனது சக ஊழியர்களுடன் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைக்கு, அகதிகள் முகாம்கள் மற்றும் கிராமங்களில் நீர் சுத்திகரிப்பு, விவசாயம் மற்றும் உணவு உதவி உள்ளிட்ட நிவாரண மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிப்பதற்காகப் பயணம் செய்திருந்தார். இருப்பினும், மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, குழு தங்கள் பணியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “நாங்கள் அங்கு நிறைய விஷயங்களைச் செய்ய முடிந்தது, ஆனால் ஆசாதாரண சூழ்நிலை காரணமாக நாங்கள் பயணத்தை குறைக்க வேண்டியிருந்தது,” என்று அவர் விளக்கினார். இருப்பினும் எங்களால் முடிந்த உதவிகளை அங்குள்ள குழந்தைகள், கர்பிணி பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு செய்தது மனதிற்கு நிம்மதி அளித்ததும் என்றும், அதே நேரம் அங்குள்ள மக்கள் படும்பாட்டை பார்க்கும்போது தங்களால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்தப் பகுதியில் அவர் இருந்த காலத்தில், வெடிச்சத்தங்கள் ஒரு வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டதாக ஹபீஸ் கூறினார். “கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், எங்களால் பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்க முடிந்தது,” என்று அவர் நினைவு கூர்ந்தார். “அவற்றைக் கேட்டதும் நீங்கள் நடுங்குவீர்கள், மேலும் ஏவுகணைகள் மேலே பறப்பதைக் கூட நாங்கள் பார்த்தோம்.” “அங்கிருந்தவர்கள் (உள்ளூர்வாசிகள்) என்னிடம், ‘சகோதரரே, கவலைப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள்’ என்று சொன்னார்கள், அது அவர்களுக்கு இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. அங்கு மக்கள் இன்னும் வேலைக்குச் சென்று தங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.” என்று அவர் கூறினார். தனது தொலைபேசியில் எச்சரிக்கைகள் மூலம், ஹபீஸ் ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றிய எச்சரிக்கைகளையும், சில பகுதிகளில் வசிப்பவர்கள் தங்குமிடம் தேடுவதற்கான அறிவுறுத்தல்களையும் பெற்றார், இருப்பினும் பாலஸ்தீனப் பகுதிகளில் அத்தகைய வசதிகள் எப்போதும் கிடைக்காது என்பதை அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சகம் (MFA), ஈரான், இஸ்ரேல் அல்லது மத்திய கிழக்குப் பகுதியில் சிங்கப்பூரர்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை என்று முன்னர் கூறியிருந்தது, ஆனால் அந்தப் பகுதிக்கான அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியது.
அந்தந்த பகுதியில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்களும் இதேபோல் சிங்கப்பூரர்கள் வீட்டிலேயே இருக்கவும், தேவைப்பட்டால் தவிர வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியிருந்தன. மேலும் துபாயில் இருந்து வந்த பொருளாதார நிபுணர் கார்ல் ராஜூவைப் பொறுத்தவரை, நாங்கள் வீடு திரும்புவதற்கு பல முயற்சிகளை அரசு எடுத்து. இருப்பினும் மிகுந்த மன அழுத்தத்தில் தான் நாங்கள் இருந்தோம். ஆனால் இப்போது பெரிய அளவில் நிம்மதியாக உள்ளது” என்றார்.