சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த ஒரு நிறுவனம் திடீரென தன்னுடைய பணிகளை நிறுத்தியதால் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லாமல் தவித்து வருவதாக இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் நேற்று முன்தினம் ஜூன் 22ஆம் தேதி காலை 9 மணியளவில் மனிதவள அமைச்சக அலுவலகத்தின் முன் திரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்கு கூடியிருந்த சில தமிழக ஊழியர்கள் ஊடகங்களை சந்தித்து பேசிய பொழுது “சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஏர் கண்டிஷனர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான கே.பி.ஏ இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தில் தாங்கள் பணியாற்றி வந்ததாகவும், தற்பொழுது அந்த நிறுவனம் மூடப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சம்பளம் இல்லாமல் தவித்து வருவதாகவும்” தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இது குறித்து உடனடியாக மனித வள அமைச்சகம் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கையை விடுத்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் “அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது. அந்த பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் சிங்கப்பூரில் இயங்கி வரும் கே.பி.ஏ இன்ஜினியரிங் மற்றும் எஸ்.கே இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என்று தற்பொழுது தெரியவந்துள்ளதாகவும்” மனிதவள அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசிய சிங்கை தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் வெளிநாட்டு ஊழியர்கள் பிரிவின் இயக்குனர் மைக்கேல்.. “ஏற்கனவே சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மையமானது இந்த இரண்டு நிறுவனங்களையும் சேர்ந்த கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை சந்தித்து அவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது” என்றார்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கின்ற ஊழியர் இதுகுறித்து பேசுவையில் எங்களின் பல பேருக்கு இரண்டு மாதங்கள் வரை இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து கேட்பதற்காக அந்த நிறுவனத்தை அணுகியபோது, அந்த நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. எங்களுக்கு இந்த பணியை வாங்கி கொடுத்த ஏஜெண்டின் செல்போன் நம்பரும் தற்பொழுது துண்டிக்கப்பட்டிருப்பதாக கூறி தன்னுடைய வேதனையை தெரிவித்தார்.

சில ஊழியர்களுக்கு 4000 வெள்ளி வரை சம்பள பாக்கியுள்ளதால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட சிரமப்பட்டு வருவதாக அங்கிருந்த ஊழியர்கள் பலரும் தெரிவித்தனர். இந்த வெளிநாட்டு ஊழியர்கள் நேற்று முன்தினம் ஜூன் 22 ஆம் தேதி காலை 9 மணி அளவில் Bendemeer பகுதியில் உள்ள சிங்கப்பூர் மனிதர்கள் அமைச்சகத்தின் சேவை மையத்திற்கு சென்றிருக்கிறார். இந்த மையம் தான் சிங்கப்பூரில் வந்து பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான Work Perit பதிவு உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் அங்கு சென்றதும் உடனடியாக அமைச்சகத்தின் அதிகாரிகள் அவர்களை நேரில் வந்து சந்தித்தனர். பின் அவர்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் தான் என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். தற்பொழுது அமைச்சகம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் அவர்களுடைய தங்கும் இடம் குறித்த ஏற்பாடுகள் பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும்.

மேலும் இந்த ஊழியர்களில் சிலரை மாற்று நிறுவனங்களுக்கு உடனடியாக மாற்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறி இருக்கிறது. மனிதவள அமைச்சக செய்தி தொடர்பாளர் மேலும் கூறுகையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மையத்துடன் இணைந்து அவர்களுக்கு முறையான தங்குமிடம் மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நாங்கள் முயற்சித்து வருகிறோம். மேலும் அந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் கட்டாயம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் உறுதி அளித்திருக்கிறது.