சிங்கப்பூரின் கடற்கரையை பொருத்தவரை பல அரிய வகை உயிரினங்கள் இங்கு வாழ்ந்து வருகிறது. அண்மையில் கூட நமது வனப் பகுதியில், உலகில் வேறு எங்குமே இல்லாத அரிய வகை வண்டு ஒன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு தற்பொழுது வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் நேற்று ஜூன் 22ஆம் தேதி மேகமூட்டம் சூழ்ந்திருந்த சிங்கப்பூர் வானிலைக்கு இடையே இந்த 2026 ஆம் ஆண்டிற்கான ஆமைகள் முட்டையிடும் பருவம் துவங்கியுள்ளது.

“Rare turtle suddenly spotted on a Singapore beach” – Authorities stepped in to rescue and assist.

அதன் ஒரு பகுதியாக கடல் ஆமை ஒன்று, அதிலும் குறிப்பாக மிக மிக அரிய வகை கடல் ஆமை ஒன்று நமது சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரைக்கு மெதுமெதுவாக ஊர்ந்து வந்தது ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Hawksbill என்று அழைக்கப்படும் அழிவின் விளிம்பில் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது இந்த வகை ஆமைகள்.

நேற்று 22 ஆம் தேதி மாலை சுமார் 5 மணி அளவில் தேசிய பூங்காக்கள் வாரியத்தின் ஊழியர்களால் எதேர்ச்சியாக இந்த ஆமை பார்க்கப்பட்டு இருக்கிறது. கடலில் இருந்து முட்டையிடுவதற்காக அந்த ஆமை சிங்கை ஈஸ்ட் கோர்ஸ் பூங்கா அருகே வந்திருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு முறை அது முட்டையிட முயற்சித்தும் அது பலனளிக்காமல், மீண்டும் கடலுக்கு திருப்பிச் சென்றதாக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்கள்.

இது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான் என்றும், மீண்டும் அது தன்னுடைய முட்டைகளை விட அந்த இடத்திற்கு அல்லது வேறு இடத்திற்கு வர வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வகை ஆமை இப்பொழுது அழியும் நிலையில் இருப்பதால் அந்த ஆமை கடலுக்கு செல்வதற்கு முன்னதாக அதனுடைய துடுப்புகளில் நமது சிங்கப்பூர் பல்லுயிர் பெருக்க மையத்தின் அதிகாரிகள் அடையாளக் குறியீடுகளையும் பொருத்தி இருக்கின்றனர்.

அதே நேரம் நமது நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் Lyndsey Tanable, அது குறித்து ஆராய்ச்சிகளை நடத்த அதனுடைய திசு மாதிரிகளையும் சேகரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இது போன்ற அழியும் நிலையில் இருக்கும் கடல் ஆமைகளின் உடல் ஆரோக்கியத்தை புரிந்து கொள்ளவும், பருவநிலை மாற்றத்தை புரிந்து கொள்ளவும் இவை பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடலில் நீண்ட நாள் வசித்து விட்டு தற்பொழுது தரைக்கு வந்திருக்கும் அந்த ஆமையின் ஓடுகளில் ஒட்டுண்ணிகள் நிறைய இருந்ததனால் அதையும் அகற்றி அதிகாரிகள் அந்த ஆமைக்கு உதவி செய்திருக்கின்றனர்.

காரணம் ஓட்டின் மீது அதிகப்படியான ஒட்டுன்னிகள் அல்லது சிப்பிகள் இருக்கும் பொழுது ஆமையினுடைய வேகம் குறைந்து அது நோய்வாய்ப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் அது காயமடைந்துள்ளது என்பதற்கான அறிகுறிகளாகவும் அது பார்க்கப்படுகிறது. ஆகவே அவை நீக்கப்பட்டு ஆமைகள் நன்றாக நீந்துவதற்கான ஏதுவான வழிகள் செய்யப்பட்டு அதன் மீது உள்ள எடை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் ஆரோக்கியம் இன்னும் அதிகரிக்கும் என்ற அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். நேற்று மாலை 5 மணி அளவில் கரைக்கு வந்த அந்த ஆமை, மீண்டும் 6 மணி 55 நிமிடத்திற்கு ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் இருந்து மீண்டும் கடல் நீரில் நீந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.