சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் FairPrice group அமைப்பின் அறக்கட்டளை பிரிவால், ஒரு புதிய திட்டமானது விரிவாக்கப்பட்டுள்ளது. அந்த புதிய திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் வசிக்கும் எளிய நிலையில் இருக்கின்ற முதியவர்கள் தங்கள் அன்றாட உணவில் கூடுதலான புரதச்சத்தை சேர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக குறைந்த வருவாய் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமாக இது பார்க்கப்படுகிறது. FairPrice அறக்கட்டளையின் கீழ் Protein Pledge என்ற பெயரில் தற்பொழுது இந்த திட்டமானது அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த திட்டம் அமலில் இருக்கும் ஒரு திட்டம் தான் என்றாலும் முதியவர்களின் உடல்நிலையை இன்னும் அதிகமாக பேணி பாதுகாக்க இந்த திட்டத்தில் இரண்டாவதாக ஒரு பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதன்படி இன்று ஜூன் 25ஆம் தேதி அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டிருக்கிறது FairPrice group. அதாவது சிங்கப்பூர் முழுவதும் உள்ள நலிவடைந்த மக்களுக்கு வருகின்ற 2030ம் ஆண்டிற்கு உள்ளாக சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள புரதச்சத்து நிறைந்த உணவுகளை விநியோகிக்கு திட்டமிட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதன்படி ஏற்கனவே 2025 ஆம் ஆண்டில் சுமார் 46 ஆயிரம் பயனாளிகளுக்கு முட்டைகள் வழங்குவதன் மூலம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இப்பொழுது இந்த திட்டத்தில் முட்டையோடு இணைத்து பாலும் இணைக்கப்படுவதாகவும் முதற்கட்டமாக தங்களது அறக்கட்டளையின் தொண்டு மற்றும் சமூக பங்காளிகளின் கீழ் ஏற்கனவே இந்த சேவையை பெற்று வரும் முதியவர்களுக்கு முன்னோடி திட்டமாக முட்டையுடன் பால் வழங்கும் சேவை அமல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. Xtra Senior Week என்று அழைக்கப்பட உள்ள இந்த திட்டம் நேற்று ஜூன் 25 அன்று தான் தொடங்கப்படுகிறது.
இனி ஒவ்வொரு மாதத்தின் கடைசி வியாழக்கிழமை முதல் அடுத்த வாரத்தின் புதன்கிழமை வரை இந்த திட்டமானது நடைபெறும். மாதந்தோறும் இந்த திட்டம் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை விலை விற்பனையில் பால் பவுடர் மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து பொருட்கள் பிரஷ் மற்றும் பேஸ்ட் போன்ற Oral Care பொருட்கள் பெரியவர்களுக்கு பயன்படும் டயப்பர்கள் போன்ற பொருட்களும் மலிவு விலையில் விற்கப்பட உள்ளது.
மேலும் FairPrice group நிறுவனத்தின் “எக்ஸ்ட்ரா” கடைகளில் Active Living Zones என்ற பிரத்தியேக பகுதி அறிமுகப்படுத்தப்பட்டு முதியோர்கள் சிரமம் இன்றி தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லவும் வழிவகை செய்யப்படுகிறது. இதன் மூலம் முதியவர்களும் அவர்களை பராமரிப்பவர்களும் எளிமையாக தங்களுக்கு தேவைப்படும் பொருள்களை கொள்முதல் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்களுடைய சேமிப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுடைய அனைத்து சாப்பிங் தேவைகளையும் ஒரே இடத்தில் நிவர்த்தி செய்யவும் FairPrice group நிறுவனம் தற்பொழுது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
