கடந்த சில நாட்களாகவே சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த இரண்டு ஏர்கண்டிஷனர் பழுதுபார்க்கும் நிறுவனங்கள் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்ட நிலையில், அதில் பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு இரண்டு முதல் நான்கு மாத சம்பள பாக்கி ஏற்கனவே இருப்பதாகவும், தற்பொழுது வேலையை இழந்து அடுத்த வேலை உணவிற்க்கக்கூட சிரமப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊழியர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் இந்தியா மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த ஊழியர்கள் தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் VVR Plant Engineering என்ற நிறுவனத்தை சேர்ந்த சில தொழிலாளர்களும் தங்களுக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் நிறுவனம் மூடப்பட்டதாகவும் புகார் அளித்திருக்கின்றனர். இறுதியில் மனிதவள அமைச்சகம் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே மூடப்பட்ட இரண்டு நிறுவனங்கள் உட்பட இந்த நிறுவனமும் ஒரே இயக்குனரின் கீழ் தான் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அந்த நிறுவனர் தற்பொழுது சிங்கப்பூரை விட்டு வெளியேறி இருப்பதாகவும் அவர் ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசி என்றும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஜூன் 23ஆம் தேதி Tuas View தங்கும்விடுதியில் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை சந்தித்து பேசிய மனிதவள அமைச்சக அதிகாரிகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் ஒரு ஊழியருக்கு 200 வெள்ளி என்கின்ற அளவில் ரொக்கமாகவும், FairPriceல் செலவிடுவதற்காக 100 வெள்ளி வவுச்சர் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதே நேரம் Tuas View தங்கும் விடுதிக்கு வந்த சிங்கப்பூரின் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச் செயலாளர் இங் சீ மெங் மற்றும் சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் மைய அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து மனிதவளத்துறை அமைச்சகத்தின் விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் தினேஷ் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடினர்.
மேலும் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக சர்ச்சை மேலாண்மைக்கான முத்தரப்பு கூட்டணியான TADM அந்த மூன்று நிறுவனங்களுக்கும் ராமு பழனிவேலு என்ற இந்திய நாட்டவர் தான் பொதுவான இயக்குனராக செயல்பட்டு வந்தார் என்றும், அவரை தற்பொழுது தொடர்பு கொண்டு விசாரணை நடத்த முயற்சித்து வருவதாகவும், ஆனால் அவர் இப்பொழுது சிங்கப்பூரில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் தகவல்களை அளித்தனர்.
அதேபோல பழனி என்கின்ற அந்த நபர் ஏற்கனவே இங்குள்ள 7 நிறுவனங்களுக்கு இயக்குனராக பணியாற்றி வந்ததும் அந்த நிறுவனங்கள் ஏர் கண்டிஷனில் பழுது பார்ப்பது, கட்டுமான சேவைகள் போன்ற சேவைகளை வழங்கி வந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல கடந்த ஜூன் 23ஆம் தேதி Hill View-ல் உள்ள அவரது பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரிக்கு சென்ற பொழுது கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த இடம் வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும் தற்பொழுது அந்த வீட்டில் ஒரு மருத்துவர் வாடகைக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
