சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் தொடர்ச்சியாக வளர்ந்து வருகின்றது. இப்போது அந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல பணிகளில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், அது சிங்கப்பூரில் வேலையில்லாத ஒரு வளர்ச்சி சூழலை ஏற்படுத்திவிட கூடாது என்பதை உறுதி செய்ய ஒரு முக்கியமான தீர்மானத்தை நேற்று மே 6ம் தேதி புதன்கிழமை நமது சிங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், தொழிலாளர் நல சங்கங்கள் ஆகியவை இணைந்து நிறைவேற்றி உள்ளது. இங்குள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய மன அமைதியை கொண்டு வந்திருக்கிறது. இந்த முக்கிய தீர்மானத்தின் சாராம்சங்கள் என்ன என்று பின்வருமாறு காணலாம்.

“AI dominance should not lead to jobless growth in Singapore” – Parliament extends unanimous support.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று மே 6ம் தேதி கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விவாதங்கள் நடைபெற்றது. அதில் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் உள்பட 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை முன் வைத்தனர். தொடர்ச்சியாக சிங்கப்பூரில் நிகழ்ந்து வரும் AI மாற்றத்தினால் இங்குள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவர்கள் தொடர்ச்சியாக விவாதித்தனர். இந்த விவாதத்தின் போது பேசிய NTUC-ன் பொதுச் செயலாளர் இங் சீ மெங் “AI-யை நாம் ஏற்றுக் கொள்வது என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல, அது இப்போது சிங்கப்பூரில் கட்டாயம் ஆகி உள்ளது. காரணம் உலக அளவில் அது கட்டாயமாகியுள்ளது” என்றார்.

அதே நேரம் சிங்கப்பூரை பொறுத்தவரையில் நம்மிடையே போட்டித் தன்மை இருந்தால் தான் நாம் உயிர முடியும். அதற்கு கட்டாயம் இந்த AI தொழில்நுட்பம் என்பது அவசியம் என்றார் அவர். இங்குள்ள நிறுவனங்களும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களும் AI அறிவை பயன்படுத்தி புதிய வாய்ப்புகளை எட்டிப் பிடிக்க வேண்டும் என்றும் மெங் கூறினார். அதே நேரம் AI-ஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி நாடு இயங்குவதும் தவறானது என்றும், அது ஊழியருக்கு அவரை மேன்படுத்த மற்றும் அவரது சொந்த வேலை பளுவை குறைக்க மட்டுமே பயன்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள், AI தொழில்நுட்பம் என்பது இங்குள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையிலும் அதை கற்றுக் கொள்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் உயரும் வண்ணத்திழும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அவர்களுடைய வாழ்வாதாரத்தையோ அல்லது தொழிலாளர்களின் வேலையையோ சீர்குலைக்கும் வண்ணம் இருக்க கூடாது என்பதும் சிங்கப்பூரின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது என்று கூறினர். மேலும் சமூக ஈவுத்தொகை, வேலை நீக்க காப்பீடு போன்ற இரு விஷயங்களில் AI-ஐ பயன்படுத்துவது தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் இந்த இரண்டுமே புதிய பணியாளர்கள் மற்றும் வேலை இழந்த பணியாளர்களுக்கு உதவ ஒரு சிறந்த தொழில்நுட்பமாக இருக்கும் என்றும் கூறினார்.

மேலும் தற்போதைய நிலையில் AI-ஐ பயன்படுத்தி முன்னேறுவது என்பது கொஞ்சம் பணம் படைத்த வசதி உள்ள நபர்களால் மட்டுமே சாத்தியம் என்றும், ஆகையால் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்த கவலைகளும் முன்வைக்கப்பட்டன. ஆகையால் முதியவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள் இதில் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்கள் AI-ஐ நல்ல முறையில் பயன்படுத்த மானிய விலையில் அது வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.