அமெரிக்க நாட்டின் முன்னணி செமி கண்டக்டர் உற்பத்தி உபகரண தயாரிப்பு நிறுவனமான Apply Materials ஏற்கனவே சிங்கப்பூரின் Tampines பகுதியில் செயல்பட்டு வரும் தன்னுடைய உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்து நேற்று ஜூன் 10ஆம் தேதி புதன்கிழமை அதை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்திருக்கிறது. இதனால் சிங்கப்பூருக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் ஏற்பட உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர் அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான Applied Materials நிறுவனம் குறைக்கடத்தி என்று அழைக்கப்படும் செமிகண்டக்டர் உற்பத்தி உபகரண தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் தற்பொழுது செய்யப்பட்டுள்ள விரிவாக்கத்தின் மூலம் எதிர்வரும் சில ஆண்டுகளில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல சேவைகள் ஆகிய பிரிவுகளில் 1000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. இது தொழில் துறையின் வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை சந்தைப்படுத்த பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலர் அளவிலான செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய வளாகம் சிங்கப்பூரில் Applied Materials நிறுவனத்தின் மேம்பட்ட க்ரீன் ரூம் திறனை இரண்டு மடங்காக உயர்த்துவதுடன் உலகளாவிய தன்னுடைய உற்பத்தி திறனையும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. Applied Materials நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கேரி டிக்கர்சன் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சிங்கப்பூரில் விரிவாக்கப்பட்டுள்ள இந்த உற்பத்தி செயல்பாடுகள் தயாரிப்பாளர்கள் அடுத்த தலைமுறை செமிகண்டக்டர்களை மிக வேகமாக மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவையான செமி கண்டக்டர் உற்பத்தி உபகரணங்களை அளிப்பதில் நமது நிறுவனத்தின் திறனை அதிகப்படுத்த பெரிய அளவில் உதவும் என்று கூறியுள்ளார்.
அதே நேரம் நேற்று நடந்த ஆலை திறப்பு விழாவில் பேசிய சிங்கப்பூரின் துணை பிரதமனும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யாங் “கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரில் தன்னுடைய செயல்பாடுகளை தொடங்கிய Applied Materials நிறுவனம் இந்த 35 ஆண்டுகால பயணத்தில் ஒரு சீரான வளர்ச்சியை அடைந்து வருவதாக” கூறினார்.
“35 ஆண்டுகளாக சிங்கப்பூரில் எந்தவித இடர்பாடும் இல்லாமல் இந்த நிறுவனம் வளர்ந்து வரும் நிலையில் தன்னுடைய வணிகத்தை தொடர்ந்து வளர்க்கவும், உலக அளவில் தனக்குள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவும், எதிர்காலத்திற்கான திறன்களை உருவாக்கவும் ஒரு சிறந்த பங்காளியாக சிங்கப்பூர் அமைந்திருப்பது Applied Materials நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய பலமாகவே பார்க்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.
“மேலும் போட்டி மிகுந்த இந்த கால சூழலில் சிங்கப்பூரில் செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த வளாக விரிவாக்கம் தங்களை முன்னணியில் வைத்திருப்பதாகவும்” அவர் கூறினார். “உலக அளவில் உள்ள நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தை தக்க வைத்துக்கொள்ள ஒரு நம்பகமான இடமாக சிங்கப்பூர் இருந்து வருகிறது. உலக அளவில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய துறைகளில் சிங்கப்பூர் தன்னுடைய திறனையும், தலைமை பண்பையும் மேம்படுத்த வேண்டும். அதே நேரம் நம்முடைய திறமைகளை எளிதில் மற்றவர்கள் நகலெடுக்க முடியாத வண்ணம் அதை மாற்ற வேண்டும்” என்றும் துணை பிரதமர் நேற்று தன்னுடைய பதிவில் கூறினார்.
