ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் விமானங்களில் பெரிய அளவில் டிக்கெட் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பயணிகள் மத்திய கிழக்கைத் தவிர்க்கும் வழித்தடங்களில் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை வாங்க போட்டியிடுகின்றனர் என்பது தான். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைமையிலான ஈரானில் நடந்த தாக்குதல்களுக்கு பிறகு, மத்திய கிழக்கில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மத்திய கிழக்கில் அதிக விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இது ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் இடைநிறுத்தமின்றி பறக்கக்கூடிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) போன்ற போட்டியாளர்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய அனுமதித்துள்ளது, இருப்பினும் விமான டிக்கெட் விலைகள் அதிகரித்துள்ளன.
Flight ticket prices surge 900% – Asian travellers in extreme concern.
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு வழி Economy டிக்கெட்டுக்கான விலை சுமார் 10,916 வெள்ளி. இந்திய மதிப்பில் பார்த்தால் சுமார் 6.9 லட்சம் ரூபாய்க்கு மேல். லண்டன் ஹீத்ரோவிலிருந்து சிங்கப்பூருக்கு SIA மூலம் பறக்கும் ஒரு வழி Economy டிக்கெட்டின் விலை நேற்று மார்ச் 5 அன்று S$10,916 ஆகும், இது பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 900 சதவீதம் அதிகமாகும் என்று பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இது குறுகிய கால பிரச்சனை தான் என்றாலும் இதனால் வணிகம் மற்றும் பிற பணிகளுக்காக பயணிக்கும் மக்களுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். வான்வழித் தாக்குதல்களால் ஏற்படும் இடையூறுகள் இத்தகைய உயர்ந்த டிக்கெட் விலைகளை நீட்டிக்கும், இது போரில் எண்ணெய் விலைகள் அதிகரித்ததால் ஏற்பட்ட இழப்புகளை விமான நிறுவனங்கள் ஈடுசெய்ய அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. மோதல் தீர்க்கப்பட்டாலோ அல்லது போர் நிறுத்தம் ஏற்பட்டாலோ மட்டுமே பிராந்தியத்தின் விமான மற்றும் கப்பல்களுக்கான நடவடிக்கைகள் மீண்டும் சீராகும்.
வளைகுடா பகுதி விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் எதிஹாட் ஆகியவற்றின் இடைநிறுத்தத்தால், இருக்கை கிலோமீட்டர் அடிப்படையில் தினசரி சர்வதேச விமான திறனில் சுமார் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மார்ச் 5ம் தேதி வரை 23,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. துபாயில் இருந்து, அங்கு சிக்கியுள்ளவர்களை சிங்கை கொண்டுவர இரண்டு வெளியேற்ற விமானங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், வளைகுடாவின் பெரும்பாலான வான்வெளி வணிக விமான சேவைகள் இன்னும் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. போர் நடக்கும் மத்திய கிழக்கு என்பது துபாய், அபுதாபி மற்றும் தோஹா போன்ற உலகின் மிக முக்கிய விமான மையங்களுக்கு தாயகமாக உள்ளது, அவை நீண்ட தூர பயணிகளுக்கான முக்கிய நிறுத்துமிடங்களாகும் ஆகையால் அங்கு பிரச்சனை நடப்பது உலகையே பாதித்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள விமான நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் பயணிக்கும் 125 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்களை கையாளுகின்றன என்பது பலர் அறியாத உண்மை. ஆசிய பசிபிக் ஏர்லைன்ஸ் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் சுபாஸ் மேனன், மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ் தெளிவாக அழுத்தத்தில் உள்ளது என்றும் நிலைமை நீடித்தால் இன்னும் மோசமாக பாதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார். இந்த பதட்டமான சூழலுக்கு மத்தியில் நேற்று துபாயில் இருந்து சிங்கப்பூருக்கு அங்கு சிக்கியிருந்த சிங்கப்பூரர்களை விமானம் மூலம் அழைத்து வந்துள்ளது சிங்கை வெளியுறவு அமைச்சகம். எமிரேட்ஸ் விமானம் EK314 கடந்த புதன்கிழமை (மார்ச் 4) உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் துபாயிலிருந்து புறப்பட்டு மார்ச் 5ம் தேதி காலை 8:15 மணிக்கு சிங்கப்பூரில் பத்திரமாக தரையிறங்கியது.
உச்சகட்ட போர் பதட்டத்தில் குண்டு சத்தங்கள் மற்றும் ஏவுகளை கண்டு அஞ்சியிருந்த மக்கள், தாயகம் திரும்பி தங்கள் சொந்தங்களை நேரில் கண்டது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. தங்கள் பிள்ளைகள், தாய் தகப்பனை மற்றும் சகோதர சகோதிரிகளை கண்ட சொந்தங்கள் அவர்களை ஆரத்தழுவி கண்ணீர் மல்க வரவேற்ற காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிங்கை மக்கள் மற்றும் அவர்களது சொந்தங்கள் சிங்கை அரசுக்கும் வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.