சிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மைக்ரோசாப்ட் டெக் சப்போர்ட் அதிகாரிகள் என்ற போலி போர்வையில் மக்களிடம் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் அளவில் படம் ஏமாற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் தெளிவாக காணலாம்.

Phone calls claiming to be from Microsoft in Singapore – Innocent victims lost ₹14 crore in a major scam.

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப ஆதரவு அதிகாரிகளை போல நடித்து, மக்களை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறி இருப்பதாக சிங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 2026 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 10 புகார்கள் இந்த போலி அதிகாரிகள் சம்பந்தமாக பதிவாகியுள்ளது என்று சிங்கப்பூர் போலீசார் தகவல் அளித்து இருக்கின்றனர். மேலும் இவ்வகை மோசடிகளில் சிங்கை பொதுமக்கள் சுமார் 1.7 மில்லியன் வெள்ளி அளவிற்கு பணத்தை இழந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நேற்று ஜூன் 9ஆம் தேதி நமது சிங்கப்பூரின் இணைய பாதுகாப்பு முகமை வெளியிட்ட ஒரு எச்சரிக்கை பதிவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மோசடி எப்படி நடக்கிறது?

இது போன்ற மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கணினி பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது, அச்சு அசலாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து வருவது போல ஒரு போலியான “பாப் அப்” எச்சரிக்கை வருகின்றது. அதில் உங்களுடைய கணினி ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது உடனடியாக நமது மைக்ரோசாப்ட்டின் அதிகாரப்பூர்வ அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதை சரி செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அந்த “பாப் அப்” செய்தியிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதில் உள்ள இணைய எண்கள் வழக்கமாக “3” என்ற இலக்கத்தில் தொடங்கும் “8” இலக்க எண்களாக இருக்கும்.

பயந்து உடனே அதிலுள்ள எண்ணுக்கு பாதிக்கப்பட்டவர்கள் போன் செய்யும் பொழுது அதில் பேசும் மர்ம நபர்கள், தாங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப அதிகாரிகள் என்று கூறி மேலும் இப்பொழுது உங்கள் அழைப்பை சிங்கப்பூர் போலீசாருக்கு மாற்றுகிறோம் என்று கூறி போலியான ஒரு இணைப்பு மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அப்பொழுது மாற்றப்பட்ட அந்த காலில் பேசும் மற்றொரு மோசடி நபர், பண மோசடி வழக்கில் உங்களுடைய கணினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது அதன் மூலம் சில சட்டவிரோத செயல்கள் நடந்து இருக்கிறது என்று கூறி பாதிக்கப்பட்ட பொது மக்களை மிரட்ட துவங்குகின்றனர்.

பின்னர் போலீசாரின் விசாரணைக்கு உதவுமாறு கூறி, வங்கி கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் வேறொரு கணக்கிற்கு மாற்றுமாறும் அல்லது தங்களுடைய வங்கி ரகசிய விவரங்களை தருமாறும் வற்புறுத்துகின்றனர். அல்லது அவர்களுடைய கணினிக்கு ரிமோட் ஆக்சஸ் பெற்று கணினி மூலம் அவர்களுடைய வங்கி கணக்கை அணுகுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் இறுதியில் பணத்தை இழந்த பிறகே போலி ஆசாமிகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

அதனால் பொதுமக்கள் இதுபோன்ற “பாப் அப்” செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், போலீஸ் அதிகாரிகளோ அல்லது மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப அதிகாரிகளோ இப்படி அலைபேசி மூலம் உங்களை தொடர்பு கொள்வதில்லை, மேலும் வங்கி கணக்குகள் மற்றும் அதனுடைய தனிப்பட்ட விவரங்களை யாரும் கேட்பதில்லை. அதனால் இது போன்ற போலியான விஷயங்களை குறித்து நீங்கள் தெரிந்து கொண்டால் உடனே சிங்கப்பூர் ScamShield-ன் 24 மணி நேர சேவை எண்ணுக்கு அழைக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.