சிங்கப்பூரில் தன்னுடைய அப்பாவுடன் வசித்து வருகின்ற நான்கு வயது ஆட்டிசம் பாதித்த தன்னுடைய மகளை இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு ஒன்றை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் ஒரு இந்திய தாய், தற்போது அந்த வழக்கில் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
Autism Spectrum Disorder பாதிப்பு உள்ள தன்னுடைய நான்கு வயது மகளை, மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வரவேண்டும் என்று கூறி இந்திய தாய் ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில் தற்பொழுது அவருடைய அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக நிராகரித்து தீர்ப்பளித்து இருக்கிறது.
காரணம் அந்த குழந்தை சிங்கப்பூரிலேயே பிறந்து இங்கேயே சிகிச்சை பெற்று வருவதையும், ஏற்கனவே அவரை வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சிங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், இது தொடர்பாக சிங்கப்பூரில் நடந்த பிற வழக்கு விவரங்களையும் அந்த தாய் டெல்லி நீதிமன்றத்தில் மறைத்துள்ளார் என்பது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மைனர் மகளை மீட்டுத் தரக் கோரி அந்த தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தர் துடேஜா ஆகியோரின் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த குழந்தை ஏற்கனவே தாயின் சம்மதத்துடன் தான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். மேலும் சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு, இந்திய நீதிமன்றத்தை கட்டுப்படுத்தாது என்கின்ற சட்டம் அமலில் இருந்தாலும், இரு நீதிமன்றங்களுக்கு இடையேயான இந்த பரஸ்பர மரியாதையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் கூறினார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அந்த தாய் ஏற்கனவே சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இருந்த உத்தரவை திட்டமிட்டு மறைத்து தன்னுடைய ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருப்பதாக நேற்று ஜூன் 10ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த நான்கு வயது குழந்தை தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை சிங்கப்பூரில் தான் கழித்திருக்கிறார் இந்த குறிப்பிடத்தக்க காலகட்டத்திற்கு இடையே அந்த தாய் மட்டும் தனது சொத்துக்கள் அனைத்தையும் இந்தியாவிற்கு இடமாற்றம் செய்துவிட்டு, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார் என்கின்ற குற்றச்சாட்டுகளும் இருப்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஒரு நான்கு வயது குழந்தையின் உடல் மற்றும் மன நலனை ஏதோ ஒரு இறுக்கமான விதிமுறையை கொண்டு மட்டும் நம்மால் மதிப்பிட்டு விட முடியாது என்றும், அனைத்து சூழ்நிலையும் ஒட்டுமொத்தமாக பரிசீலனை செய்து தான் அதனை தீர்மானிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த குழந்தை சிங்கப்பூரில் பிறந்தது என்றும் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கி இருந்த 11 மாதங்களைத் தவிர அவர் தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை சிங்கப்பூரில் தான் கழித்திருக்கிறார் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
தற்பொழுது மனுவை தாக்கல் செய்த அந்த தாய், சிங்கப்பூர் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறி இப்படி செயல்பட்டது தவறு என்றும் இருப்பினும் அது தங்களுடைய விசாரணை வலையத்திற்குள் வராது என்பதனால் அந்த சிங்கை விசாரணைகளை அவர் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
