சிங்கப்பூரில் புங்கோல் பகுதியில் வருகின்ற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஆளில்லா ஷட்டில் பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதில் இலவசமாக பயணம் செய்ய பொதுமக்கள் இன்று மார்ச் 25ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று சிங்கப்பூரின் நில போக்குவரத்து ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல்களையும், அதற்கான இணையதளங்களையும் வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே சிங்கப்பூர் ஆளில்லா டாக்ஸிகளை சில வாரங்களுக்கு முன்பு சோதனை ஓட்டம் நடத்தியது. இந்நிலையில் புதிதாக சிங்கப்பூர் வந்திருக்கும் ஆறு ஆளில்லா ஷட்டில் பேருந்துகள் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் புங்கோல் பகுதியில் செயல்பட துவங்க உள்ளது.

From April 1 – Singapore’s dream scheme to take effect; free booking has already started.

இதுகுறித்து சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் இன்று மார்ச் 25ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடங்கும் இந்த சேவை ஆரம்ப காலத்தில் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும், 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்த சேவை வணிக ரீதியான செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்திருக்கிறது. மேலும் வணிக ரீதியாக இந்த ஆளில்லா ஷட்டில் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் பொழுது ஒரு பயணத்திற்கு ஒருவருக்கு 4 சிங்கப்பூர் டாலர் என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் நிலப்போக்குவரத்து ஆணையும் முன்கூட்டியே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பயணங்களுக்கு தற்பொழுது மக்கள் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும் என்பதனால் இன்று முதல் துவங்கும் இந்த புக்கின்களை மக்கள் இலவசமாக செய்து இதில் பயணிக்கலாம். rideair.ai என்ற இணையதளம் மூலம் மக்கள் தங்களுடைய விபரங்களை பதிவு செய்து, இடங்களையும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆளில்லா ஷட்டில் பேருந்துகளை பொறுத்தவரை வார நாட்களில் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த சேவை வழங்கப்படும். அன்றைய தினத்தின் கடைசி பயணம் மாலை 4:30 மணிக்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆறு ஆளில்லா பேருந்துகள் இயக்கப்பட உள்ள இடங்கள் குறித்த தகவலையும் நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மூன்று வெவ்வேறு வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதில் புங்கோல் மேற்கு முதல் கிழக்கு வரை 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள இடத்தை சுமார் 35 நிமிடங்களில் இந்த பேருந்து கடக்கும். இதில் புங்கோல் பிளாசா மற்றும் ஒயாசிஸ் டெரஸ் போன்ற இடங்கள் அடங்கும். வழித்தடம் இரண்டை பொறுத்தவரை புங்கோல் மேற்கு முதல் வடக்கு வரை சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் இந்த பேருந்து கடந்து செல்லும், One Punggol மற்றும் புங்கோல் கோஸ்ட் மால் வழியாக இது செல்லும். வழித்தடம் மூன்றை பொறுத்தவரை Punggol கோஸ்ட் மாலில் இருந்து தொடங்கி சுமார் 20 நிமிடங்கள் பயணிக்கும் ஒரு சிறிய வழித்தடத்தையும் இந்த பேருந்து கவர் செய்யும்.

சிங்கப்பூரை பொறுத்தவரை இப்போது இந்த சேவையை கிராப் நிறுவனமும், சீன தானியங்கி வாகன நிறுவனமான WeRide உடன் இணைந்து வழங்குகிறது. ஏற்கனவே சுமார் 740 பேர் இந்த சேவைகளை சோதனை முறையில் பயன்படுத்தியுள்ளனர். அவர்களில் 99% பேர் இது மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறந்த அனுபவம் தருகிறது என்று தெரிவித்திருக்கின்றனர். மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பாதுகாப்பு அதிகாரி உடன் இருப்பார். அவசர காலங்களில் அவர் வாகனத்தை கட்டுப்படுத்துவார். இந்த தானியங்கி வாகனங்கள் பொது போக்குவரத்து வசதி குறைவாக உள்ள இடங்களில் முதலில் செயல்படுத்தப்படும். மேலும் இதனை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் பயண நேரம் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை குறையும் என்றும் நில போக்குவரத்து ஆணையம் எதிர்பார்க்கிறது.