சிங்கப்பூரில் வசிப்பவர்களாக இருந்தாலும் சரி, அல்லது தொழில் ரீதியாக இங்கு வந்து பணி செய்துவிட்டு சொந்த நாட்டுக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி கட்டாயம் இங்கிருந்து ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த சூழலில் சிங்கப்பூரிலிருந்து தங்கம் வாங்கி செல்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தங்க வியாபாரிகள் வெளியிட்டு இருக்கின்றனர். இது குறித்து நேற்று வெளியான ஒரு அறிக்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் சந்தையில் இப்பொழுது போலி தங்க பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கின்றனர் இது குறித்த முழு தகவலை இப்பொழுது காணலாம்.
Fake gold circulating in Singapore market – Traders warn the public to stay alert.
கடந்த ஜனவரி மாதம் முதல் சிங்கப்பூரில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவ்வப்போது தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வந்தாலும் இந்த சூழலை பயன்படுத்தி சந்தையில் போலி தங்கப் பொருட்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சிங்கப்பூரில் உள்ள பல பிரபல தங்க வியாபாரிகள் ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் போலி தங்க விற்பனை தொடர்பான போலீஸ் புகார்கள் 20க்கும் மேற்பட்ட சதவீதம் அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தங்கத்தின் மீதான ஆர்வம் மற்றும் அதில் முதலீடு செய்ய மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருவதே இதற்கு முழு காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
உலக அளவில் போர் பதற்றம் மற்றும் பிற இக்கட்டான சூழல் காரணமாக தங்க கொள்முதல் ஒரு பாதுகாப்பான முதலீட்டாக மக்களால் கருதப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏறி வருவதால் அதனை மக்கள் வாங்க நினைப்பது இயல்பான ஒரு விஷயம் தான் என்று மெட்டல் & பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குவெக் சியோ பின் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்.. “இந்த ஆண்டு ஜனவரியில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 5000 அமெரிக்க டாலரை தாண்டியதாகவும், ஆனால் தற்பொழுது அதனுடைய நிலை 4000 டாலர்களிலேயே நீடிக்கிறது என்றாலும் கடைகளில் தங்கத்தின் இருப்பு குறைவதால் சமூக ஊடகங்கள் வழியாக அதனை வாங்கும் வழக்கம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது”.
“அதேநேரம் தங்க விநியோகம் குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு எங்களிடம் போதுமான இருப்பு இருப்பதில்லை” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க இந்த சூழலை பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் போலி தங்கங்களை விற்க முயல்வதாகவும் அவர் எச்சரித்திருக்கிறார்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
இந்த புதிய பிரச்சினை குறித்து பேசியுள்ள பல முன்னணி தங்க வியாபாரிகள் தங்கத்தை போலவே தோற்றமளிக்கின்ற சில பொருட்கள் தங்கத்தை அடிக்கடி கையாளும் பெரிய வல்லுனர்களையே குழப்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. சில நேரங்களில் உண்மையான தங்கத்தின் சான்றிதழ் மற்றும் வரிசை எண்களைக் கூட அப்படியே அச்சிட்டு அந்த போலி தங்க நகைகள் விற்பனைக்கு வருகின்றன. இதுகுறித்து கோல்ட் சில்வர் சென்ட்ரல் நிறுவனத்தின் இயக்குனர் திரு பிரையன் லான் பேசுகையில்.. “இந்த போலி தங்கங்கள் அசல் தங்கத்தின் வரிசை எண் மற்றும் சான்றிதழோடு வருகின்றது. அதே நேரம் வழக்கத்தை விட சற்று குறைவான விலையில் இது இணையத்தில் விற்பனைக்கு வருவதால் மக்கள் அதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். உண்மையில் இது மக்களை மட்டும் அல்லாமல் இந்த தங்கத் தொழிலுக்கு புதிதாக வரும் சில வியாபாரிகள் கூட ஏமாறும் அளவிற்கு போலி தங்கங்கள் அசலான தங்கத்திற்கு இணையாக உருவகப்படுத்தப்படுகிறது” என்கிறார் அவர்.
தங்கத்தின் அடர்த்தியானது டங்ஸ்டன் போன்ற சில உலோகங்களின் அடர்த்தியோடு ஒத்திருப்பதால் சோதனை இயந்திரங்களால் கூட இவை போலி என்பதை உடனடியாக கண்டறிய முடியாது. மேல்புறம் தடிமனான தங்கம் முலாம் பூசப்பட்டு உள்ளே வேறு உலோகம் மறைக்கப்பட்டிருக்கலாம் ஆகவே அதன் மையப் பகுதியை வெட்டி சோதித்தால் மட்டுமே அது போலியானதா அல்லது உண்மை தங்கமா என்பது குறித்த விவரங்கள் தெரியும் இது அனைவருக்கும் அனைத்து நேரத்திலும் சாத்தியப்படாத ஒரு விஷயம் என்பதனால் ஒரு தங்கத்தை முதலீடாக நீங்கள் வாங்க நினைக்கும் பொழுது, பல ஆண்டுகளாக தங்க சந்தையில் ஈடுபட்டிருக்கும் உண்மையான தங்க வியாபாரிகளை நேரில் அணுகி அந்த தங்கத்தை முறையாக சோதனை செய்து அதை வாங்குமாறும் பெரிய வியாபாரிகள் தற்பொழுது கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.