சிங்கப்பூரில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 8000 ஆக இருந்த கொரோனா பாதிப்புகள் தற்பொழுது ஒன்றரை மடங்கு அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர் தொற்று நோய் முகமை தெரிவித்திருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
“COVID-19 cases rise to 12,700 in Singapore” – CDA monitoring the increase in infections.
இந்த டிஜிட்டல் உலகமே ஒரு மிகப்பெரிய முடக்கத்தை சந்திக்க காரணமாக மாறியது கொரோனா என்கின்ற பெரும்தொற்று. உலக அளவில் பல லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய இந்த நோய், இப்பொழுது பெரிய வீரியத்துடன் இல்லை என்றாலும் தொடர்ச்சியாக மனிதர்கள் மத்தியில் பரவி வருகின்றது என்கிறது ஆய்வுகள். இந்த சூழலில் கடந்த வாரத்தில் 8000 ஆக இருந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 12700 ஆக சிங்கப்பூரில் உயர்ந்திருப்பதாக சிங்கப்பூரின் தொற்றுநோய் முகமை தகவல் வெளியிட்டு இருக்கிறது.
நேற்று மே 21ஆம் தேதி சிங்கப்பூர் தொற்றுநோய் முகமை வெளியிட்ட அந்த அறிக்கையில் இதே காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தினம் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் சராசரி எண்ணிக்கையானது 56 என்ற அளவில் இருந்து 73 ஆக உயர்ந்துள்ளது என்றும், தீவிர சிகிச்சை பிரிவில் சராசரியாக தினமும் ஒரு நோயாளி அனுமதிக்கப்படுகிறார் என்றும் தெரிவித்திருக்கிறது.
அதே நேரம் மற்ற பிராந்தியங்களை ஒப்பிடும் பொழுது சுவாச நோய்களை போலவே வருடத்தின் பல்வேறு காலகட்டங்களில் இந்த கொரோனாவின் அலையும் ஏற்படுவது ஒரு இயல்பான ஒன்றுதான் என்றும் இதற்கு முன்பு பரவிய தீவிரமான கொரோனா அலையைப் போல கடுமையான பாதிப்பை இப்பொழுது உள்ள கொரோனா அலை ஏற்படுத்துமா என்பது குறித்த அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் முகமை தெரிவித்திருக்கிறது. தற்பொழுது சிங்கப்பூரில் பரவி வரும் இந்த கொரோனா எம்.பி.1.8.1 வகையாக உள்ளது என்றும் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியே இதற்கு போதுமானது என்றும் கூறி இருக்கிறது முகமை.
பராமரிப்பு இல்லங்களில் தங்கி இருக்கும் வயதானவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக எளிதில் பாதிக்கக்கூடிய ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் என நோய் பாதிப்புக்கு உள்ளாக கூடிய நிலையில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் இந்த தொற்று பரவ அபாயம் இருக்கிறது. அதனால் அவர்கள் தங்களுடைய தடுப்பூசிகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் சிடிஏ அறிவுறுத்தியுள்ளது. சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுடன் வசிப்பவர்கள் அல்லது பணிபுரிபவர்கள் இந்த தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளுமாறும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மேலும் இந்த கொரானா ஊசியை பெற விரும்பும் ஆறு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மற்ற நபர்களும் தொடர்ந்து தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் சிடிஏ அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் கொரனாவின் அறிகுறிகள் உள்ளவர்கள் முககசவம் அணிந்து கொள்ளுமாறும் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவர்கள் செல்லாமல் இருப்பதும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுவதாகவும் CDA அறிவுறுத்தி இருக்கிறது.
