இந்திய திரை உலகின், குறிப்பாக பாலிவுட் உலகின் மிகச்சிறந்த பின்னணி பாடுகராகவும் இசையமைப்பாளராகவும் பல ஆண்டுகளாக பயணித்து வந்தவர் தான் ஜுபின் கார்க். 52 வயது நிரம்பிய இவர் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற இருந்த ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்திருந்தார். ஆனால் அப்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக இவர் நீரில் மூழ்கி காலமானார். மேலும் இவருடைய சொந்த மாநிலமான அசாம் மாநில போலீசார் மற்றும் அம்மாநில முதல்வர், சிங்கையில் இறந்த ஜுபின் கார்க் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகவும். அது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றும், அது சம்பந்தமாக இதுவரை இந்தியாவில் 7 பேரை கைது செய்திருப்பதாகவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்று வந்த வழக்கில் சிங்கப்பூர் மரண விசாரணை நீதிமன்றம் பாடகர் ஜுபின் வழக்கில் தன்னுடைய இறுதி தீர்ப்பை அளித்திருக்கிறது.
Indian singer Zubeen Garg death case – Singapore court delivers the final verdict.
சிங்கை அளித்த தீர்ப்பு
அதன்படி பிரபல பின்னணி பாடகர் ஜுபின் கார்க் அவர்களுடைய மரணம் என்பது “துரதிஷ்டவசமான விபத்தால் ஏற்பட்ட மரணமே” அன்று இதில் எந்தவித சதியோ அல்லது குற்றச்சாட்டுகளோ இல்லை என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. மேலும் சிங்கப்பூர் காவல்துறை நடத்திய அனைத்து விசாரணைகளும் நேர்மையாகவே உள்ளது என்றும் நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையிலான சுமார் 60 ஆண்டு கால நட்பினை கொண்டாடும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் “வடகிழக்கு இந்திய திருவிழா” என்ற பெயரில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடக்கவிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தான் பாலிவுட் உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளரும் பாடகருமான ஜுபின் கார்க் சிங்கப்பூர் வந்திருந்தார்.
மேலும் செப்டம்பர் 20ஆம் தேதி அந்த நிகழ்ச்சி நடக்கவிருந்த நிலையில் அதற்கு முந்தின நாள் செப்டம்பர் 19ம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர்களுடன் லாசரஸ் தீவு அருகே ஒரு படகு சுற்றுலாவிற்கு அவர் சென்றிருந்தார். இந்த சூழலில் தான் அந்த படகில் இருந்து கடலில் விழுந்து எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவத்தன்று ஜுபின் கார்க் அதிக அளவில் மது அருந்தி இருந்தார் என்றும், ரத்த பரிசோதனையில் அவரது உடம்பில் சுமார் 100 மில்லி ரத்தத்திற்கு 330-க்கும் மேற்பட்ட அளவில் மது கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அவர் கடலில் இறங்குவதற்கு முன்னால் பாதுகாப்பு கவசத்தையும் அவர் அணிந்திருக்கவில்லை. அவர் பயணம் செய்த படகின் கேப்டன் எத்தனையோ முறை எச்சரித்தும், அவருடைய எச்சரிக்கையை மீறி அவர் கடலுக்குள் உரிய பாதுகாப்பு இன்றி இறங்கியதாகவும் கூறப்படுகிறது.
கடலுக்குள் இறங்கிய ஜூபின் சிறிது நேரத்திலேயே அசைவற்று நீரில் மிதந்துள்ளார். உடனே அவர் மீட்கப்பட்டு அவருக்கு படகிலேயே CPR வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். கடந்த ஆறு மாத காலமாக இது குறித்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜுபின் கார்க் குடும்பத்தினரும் அசாம் மாநில அரசியல் தலைவர்களும் பல திடுக்கிடும் தகவல்களை முன் வைத்தனர். இந்நிலையில் நமது சிங்கப்பூர் மரண விசாரணை ஆணையம் இதை தீர விசாரித்து அவருடைய மரணம் ஒரு விபத்து என்றும், இதில் எந்தவிதமான சதி திட்டமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.