சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் போல வேடமிட்டு மக்களை மிரட்டி அல்லது ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் இப்போது புதிய வகையில் மக்களை ஏமாற்ற துவங்கியுள்ளது. இது குறித்த ஒரு எச்சரிக்கையையும், விழிப்புணர்வையும் நமது சிங்கை போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டு இருக்கின்றனர், இது குறித்து இந்த பதிவில் விளக்கமாக காணலாம்.
Singapore residents and migrant workers – Scam risk via Google Meet; SPF issues warning.
நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி சிங்கப்பூர் போலீஸ் படை வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் இருந்து சிங்கப்பூர் போலீஸ் அதிகாரிகளை போலவே உடைகள் மற்றும் வேடம அணிந்து, “கூகுள் மீட்” மூலம் பொது மக்களை ஏமாற்றும் ஆசாமிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த 19 நாளில் இதுவரை 13 மோசடி வழக்குகள் இந்த “கூகுள் மீட்” மோசடி சம்பந்தமாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த வகை மோசடிகளில் மக்கள் இதுவரை கிட்டத்தட்ட 32,000 வெள்ளி வரை இழந்துள்ளதாகவும், நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இந்த மோசடி எப்படி நடைபெறுகிறது?
முதலில் பாதிக்கப்படும் நபர்களுக்கு தெரியாத ஒரு நபரிடமிருந்து திடீரென “கூகுள் மீட்” அழைப்பு வருகின்றது. தெரியாத நபரிடம் இருந்து அந்த அழைப்பு வருவதை கண்டு, அதை புறக்கணிப்பவர்கள் இதில் பாதுகாப்பாக இருக்கின்றனர். அதே நேரம் இது யாராக இருக்கும் என்கின்ற பதட்டத்துடன் அந்த அழைப்பை ஏற்பவர்கள் தான் இதில் பெரிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். காரணம் அந்த வீடியோ அழைப்பில் பேசுபவர்கள் போலீசாரின் சீருடை அணிந்து கொண்டு தாங்கள் சிங்கப்பூர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். மேலும் உங்களுக்கு வரக்கூடிய அந்த கூகுள் மீட் அழைப்பின் ப்ரொபைல் போட்டோ கூட அச்சு அசலாக சிங்கப்பூர் காவல்துறையினுடைய லோகோவை போல இருப்பது தான் இதில் உச்சகட்ட அதிர்ச்சி. மக்களை நம்ப வைத்து ஏமாற்ற அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியிலும் சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூர் போலீஸ் என்ற சொற்கள் இடம் பெற்றிருக்கும்.
தங்களுடைய வலையில் சிக்கும் நபர்களிடம், அவர்களது வங்கி புத்தகத்தில் அல்லது அவர்களது வங்கி கணக்கி ஏதோ பிரச்சனை இருப்பதாக கூறி அது குறித்து உடனே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மோசடி ஆசாமிகள் கூறுகின்றனர். மேலும் இது விசாரணையின் ஒரு பகுதி என்று கூறிவிட்டு அந்த நபரின் வங்கியின் இணைய வழி பாஸ்வேர்ட்களை கேட்கின்றனர். மேலும் அவர்களுக்கு வரும் OTP-ஐ தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறும், இல்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டுகின்றனர். ஆனால் OTP-யை கொடுத்து தங்களுடைய வங்கி கணக்கிலிருந்து பணம் களவு போன பிறகு தான் நமக்கு வந்த அழைப்பு ஒரு போலியான அழைப்பு என்று அவர்களுக்கு தெரியவரும். இதுபோன்ற முறையில் தான் இந்த மோசடி ஆசாமியில் தற்பொழுது மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
வெளிநாட்டு ஊழியர்களும் இது போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் அவர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அதே நேரம் சிங்கப்பூர் காவல்துறை அல்லது அந்த துறை சார்ந்த அதிகாரிகள் ஒருபோதும் whatsapp அல்லது google meet அல்லது வீடியோ கால் போன்ற விஷயங்களில் ஒருவரை தொடர்பு கொள்ள மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வங்கி விவரங்களையும் அல்லது அது சம்பந்தமான OTP-களையும் கேட்க அவர்களுக்கு அவசியமே இல்லை என்றும் அதனால் ஒரு போலீஸ் அதிகாரி வீடியோ காலில் வங்கி கணக்கு குறித்த தகவல் அல்லது OTP-யை கேட்கிறார் என்றால் அது 100% ஒரு ஏமாற்று வேலை என்பதை தெரிந்து கொண்டு உடனடியாக மக்கள் போலீசாரை அணுக வேண்டும். சிங்கப்பூர் ScamShield-ன் 24 மணி நேர உதவி எண்ணான 1799 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.