சிங்கப்பூரில் இந்த 2026-ல் வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய உயர்வில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சிங்கப்பூரில் நாணய ஆணையம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம். மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக சிங்கப்பூருக்கு மட்டுமன்றி உலக அளவில் ஒரு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எரிபொருள் பிரச்சனை தான் முதன்மையானது என்றாலும், பல புதிய பிரச்சனைகளுக்கு அது வித்திடுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த சூழலில் சிங்கப்பூரின் நாணய ஆணையம் ஏற்கனவே நம்முடைய சிங்கப்பூர் டாலரை வலுவடைய செய்ய பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இந்த 2026-ல் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கும் என்பது குறித்த சில கணிப்புகளை நேற்று ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டிருக்கிறது.
In Singapore – Job market slowdown; salary hikes are difficult; employees urged to secure existing jobs.
ஊதிய உயர்வு குறைய வாய்ப்பு..!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பிரச்சனையின் காரணமாக ஏற்படும் எரிபொருள் மற்றும் பிற பிரச்சினைகளால் இந்த 2026ம் ஆண்டில், சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் கூடுதலாக வேலைக்கு ஆட்களை எடுப்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க போகிறது என்றும். ஊதிய உயர்வு என்று வரும்பொழுது அது கடந்த 2025 ஆம் ஆண்டை ஒப்பிடும் பொழுது குறைந்த அளவிலேயே இருக்கும் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறது. அதன்படி ஈரான் போர் வெடித்த பிறகு சிங்கப்பூர் வர்த்தக கடன் பணியகத்தால் சிங்கப்பூர் முழுமைக்கும் நடத்தப்பட்ட ஒரு வணிக நம்பிக்கை குறியீட்டின் அடிப்படையில், நமது ஒட்டுமொத்த வணிக கண்ணோட்டமும் கணிசமான அளவில் மந்தமடைந்திருக்கிறது.
2025 ஆம் ஆண்டை ஒப்பிடும் பொழுது, சிங்கப்பூரில் வரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கடந்த ஆண்டு காணப்பட்ட வேலைவாய்ப்பு வளர்ச்சி இந்த 2026-ல் நிச்சயம் குறையும் என்று நாணய ஆணையம் மதிப்பிட்டுள்ளது. குடிமக்கள் அல்லாத வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சியும் இதற்கு ஏற்ப மாறும், அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதையும் ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறது சிங்கப்பூர் நாணய ஆணையம். அதே நேரம் சிங்கப்பூரை சார்ந்த சேவைகள் மற்றும் நவீன சேவை தொழில்களில் நிலவும் காலி பணியிடங்கள் காரணமாக உள்ளூர்வாசிகளுக்கான வேலை வாய்ப்பு விகிதம் முன்பு இருந்ததைப் போலவே இருக்கும் என்றும் அதில் எந்தவித சரிவும் எதிர்பார்க்கப்படவில்லை என்பதையும் நாணய ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
மேலும் சுகாதாரம், சமூக சேவை, கல்வி மற்றும் பொது நிர்வாகம் போன்ற இதர துறைகளில் தொழிலாளர்களின் தேவை வழக்கத்தை போல சீராகவும், வலுவாகவும் இருக்கிறது. மேலும் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சார்ந்த பணிகளில் திறமையான ஊழியர்களுக்கு தட்டுப்பாடு நீடிப்பது உண்மையே என்பதையும் நாணயம் ஆணையும் ஒப்புக்கொண்டுள்ளது..
இந்த போரின் காரணமாக வரவிருக்கும் காலங்களில் வேலைவாய்ப்பு சந்தை என்பது மந்தமடையும் என்பதனால் 2025 ஆம் ஆண்டு ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு உள்ளூர் வாசிகளுக்கான ஊதிய வளர்ச்சியும் ஒரு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உள்ளூர் வாசிகளுக்காக ஏற்கனவே அரசு அறிவித்துள்ள Progressive Wage Model போன்ற கொள்கைகள் குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்களுக்கு பெரிய உறுதுணையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பொருளாதார மந்தநிலை நாம் கணித்ததை விட நீண்ட காலம் தொடர்ந்தால் அல்லது இன்னும் தீவிரமடைந்தால் நமது வேலைவாய்ப்பு சந்தையில் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை என்கிறது சிங்கப்பூர் நாளைய ஆணையம் கூறியுள்ளது.