சிங்கப்பூர் டாலருக்கு எதிரான ஜப்பானிய யென் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் சரிவை சந்தித்திருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் விளக்கமாக காணலாம். அண்மையில் ஏற்பட்ட மத்திய கிழக்கு போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அது உலக நாடுகளை பெரிய அளவில் பாதித்திருக்கிறது. இந்த சூழலில் நம்முடைய சிங்கப்பூர் டாலரை வலுவான நிலையில் வைத்திருக்க சில புதிய கொள்கைகளை அறிவிப்பதாக அண்மையில் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்திருந்தது.
Singapore’s monetary policy boosts SGD – Surges against Japanese Yen and Indian Rupee.
இந்த சூழலில் வரலாறு காணாத விதமாக ஜப்பானிய யென், சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ஒரு மிகப்பெரிய புதிய சரிவை சந்தித்துள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் சிங்கப்பூர் மக்கள் இப்போது சிங்கப்பூர் டாலருக்கு அதிகப்படியான ஜப்பானிய யென்னை பெற முடியும். மேலும் இந்த நிலை 2026 ஆம் ஆண்டு முழுவதும் தொடரக்கூடும் என்றும் நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் காரணமாக நிலவும் எரிபொருள் விலையேற்றம் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அன்று ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகராக 125.33 ஜப்பானிய யென் என்ற அளவில் இருந்து, பின் ஏப்ரல் 15ஆம் தேதி அது மீண்டும் 124.91 யென் என்ற அளவில் நிலைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் Bloomberg அளித்துள்ள தகவலின்படி 2025-ல் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக 5.6 விழுக்காடு சரிந்த ஜப்பானிய யென், இந்த 2026-ல் மேலும் 2.6 விழுக்காடு சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இந்தியாவின் ரூபாய்க்கு எதிராகவும் இன்று ஏப்ரல் 16ஆம் தேதி ஒரு சிங்கப்பூர் டாலர் ஆனது 73.54 என்கின்ற அளவில் நிலைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதாகவும் இந்த ஆண்டு இறுதி வரை இந்த அதிகரிப்பு தொடங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கிட்டத்தட்ட 73.70 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.
சிங்கி டாலரின் வலிமைக்கு என்ன காரணம்?
ஏற்கனவே கூறியது போல மத்திய கிழக்கு போர் காரணமாக எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்வால் ஏற்படும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த, மற்றும் பெரிய அளவில் இறக்குமதியை சார்ந்திருக்கும் சிங்கப்பூர் அதற்கான செலவுகளை குறைக்க தன்னுடைய நாணய ஆணையம் மூலம் பணவியல் கொள்கையை இறுக்கமாக்கியது. ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சிங்கப்பூர் டாலர் மற்றும் முக்கிய நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக வலுவடைந்ததை அனுமதிக்கும் வகையில் புதிய பணவியல் கொள்கைகள் சிங்கப்பூர் அறிமுகம் செய்தது. இதுகுறித்து சிங்கப்பூரின் CMC மார்க்கெட் விற்பனை வர்த்தகரான லிசா பேசுகையில்.. “சிங்கப்பூர் டாலர் மற்றும் ஜப்பானிய யென் என்பது 2026 முழுவதும் கிட்டத்தட்ட இந்த சாதனை அளவையே ஒட்டி இருக்கும். நமது சிங்கப்பூர் டாலரின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மின்னணு ஏற்றுமதிகள், வலுவான வர்த்தகம் மற்றும் நமது நிதி மேலாண்மை முதலீடுகள் ஆகியவை சிங்கப்பூர் டாலருக்கு தொடர்ந்து ஆதரவளித்து அதனை உச்ச நிலையில் வைத்திருக்கும்” என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூரை போல எரிசக்தி தேவைக்கு பெரிய அளவில் இறக்குமதியே ஜப்பான் நம்பி இருப்பதால், எண்ணெய் விலை உயரும் பொழுது ஜப்பானின் இறக்குமதி செலவும் அதிகரித்தே தீரும். இதுவே அந்த நாட்டினுடைய நாணயத்தின் மதிப்பை பெரிய அளவில் குறைக்கிறது. இதை சமாளிக்க பேங்க் ஆப் ஜப்பான் தன்னுடைய வட்டி விகிதங்களை கிட்டத்தட்ட 0.75% விழுக்காடு உயர்த்தி இருந்தாலும், அதை மற்ற நாடுகளோடு ஒப்பிடும் பொழுது அதனுடைய பணவியல் கொள்கையானது சற்று தளர்வாகவே இருக்கின்றது. இதுவே இந்த பெரிய வீழ்ச்சிக்கு காரணமாகவும் நிபுணர்கள் பார்க்கின்றனர்.