சிங்கப்பூரில் பள்ளிகளில் நடக்கும் Bullying எனப்படும் மாணவர்களுக்கு எதிரான கேலி கிண்டல்கள் தடுப்பு விதிகளில் சில முக்கிய சீர்திருத்தங்களை கல்வி அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இது ஒரு மிகச்சிறந்த முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது, இது குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

“Stricter discipline for students” – Rules tighten in Singapore schools; parents welcome the move.

மாணவர்கள் பருவம் என்பது ஒரு நல்ல எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் இடும் ஒரு வயது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல, மாணவர்களை இளம் வயதிலேயே சீர்திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை என்பதை தாண்டி அது கல்வி நிறுவனங்களின் தலையாய பொறுப்பாகவும் மாறுகின்றது. இந்த சூழலில் சிங்கப்பூரில் உள்ள எல்லா பள்ளிகளிலும் Bullying எனப்படும் கேலி கிண்டல்கள் மற்றும் கொடுமைப்படுத்தும் சம்பவங்களை கையாள சில முக்கிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்கின்ற ஒரு புதிய அறிவிப்பு இங்குள்ள பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய மன நிம்மதியை கொடுத்திருக்கிறது என்றே கூறலாம்.

அதே நேரம் தவறு செய்யும் மாணவர்களை சீர்திருத்தும் நடவடிக்கையாகவே இது செய்யப்படுகிறது என்றும், அவர்களை தண்டித்தே தீர வேண்டும் என்கின்ற மனப்பான்மை இது அல்ல என்பதையும் அரசு ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த 2026 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் பள்ளிகளில் Bullyingக்கு எதிராக சில முக்கிய நடைமுறைகள் கொண்டுவரப்படுகிறது. இதில் மாணவர்களை இடைநீக்கம் செய்வது தொடங்கி அவர்களுக்கு பிரம்படி வழங்குவது வரை பல முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2000 மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்கும் பணிகளுக்கு பிறகு 9 புதிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் மூலம், தாங்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து புகார் அளிக்கும் மாணவர்களின் தனிப்பட்ட அடையாளத்தை பாதுகாப்பது தான் இந்த புதிய திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது. மேலும் Bullying போன்ற தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை உடனடியாக தண்டிப்பது இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது. முதலில் மாணவர்களை கவுன்சிலிங் மூலம் திருத்த பள்ளிகள் முயல வேண்டும். தங்களுடைய செயலால் பிறருக்கு ஏற்பட்ட பாதிப்பை அவர்கள் உணர்ந்து தங்களை தாங்களே சீர் செய்து கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் மனித வளத்தை வழங்குவதன் மூலம் ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைத்து இதுபோன்ற தவறான விஷயங்களில் ஈடுபடும் மாணவர்களை கையாள பிரத்தியேக பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பண்பை வளர்க்க CCE எனப்படும் குணநலன் மற்றும் குடியுரிமை கல்விகள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஒருவேளை மாணவர்கள் இவை அனைத்தையும் மீறி Bullying எனப்படும் பிற மாணவர்களை வாய்மொழி வழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்தும் பொழுது, தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு பிரம்படி வழங்கவும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. தண்டனைகள் ஒரு தற்காலிக தீர்வு தான் என்றாலும் கூட, நீண்டகால அடிப்படையில் இளம் மாணவர்கள் மன நிலையில் நல்ல மாற்றங்களை கொண்டு வருவது இந்த புதிய சட்ட திருத்தத்தின் உண்மையான நோக்கமாகவும் அதனுடைய வெற்றியாகவும் அமையும் என்று கல்வி அமைச்சகம் நம்புகிறது.