சிங்கப்பூர் தன்னுடைய எரிசக்தி திறனை மேலும் மேம்படுத்துவதற்கும் அவ்வப்போது நிகழும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களுக்கு எதிராக தன்னை வலுப்படுத்துவதற்கும் சிறந்த நீர் தொழில்நுட்பத்தை தற்பொழுது நாடி வருவதாக நமது சிங்கையின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் Grace Fu தெரிவித்திருக்கிறார். நேற்று ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூரின் சர்வதேச நீர் வாரத்தில் பங்கேற்று நீர் நிர்வாகம் குறித்து அமைச்சர்கள் குழுவுடன் அவர் விவாதம் நடத்தினார்.
“Singapore conquers climate change” – A new revolution in water management!
மேலும் எதிர் வரக்கூடிய பருவநிலை மாற்ற அபாயங்கள் நமது நாட்டின் நான்கு முக்கிய நீர் ஆதாரங்களில் குறைந்தபட்சம் இரண்டையாவது பாதிக்கலாம் என்று அவர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. காரணம் அந்த இரண்டு நீர் நிலைகளும் முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பி இருக்கும் நீர்நிலைகள் என்றும் அவர் கூறினார். மேலும் சிங்கப்பூரில் மற்ற இரு நீர் ஆதாரங்கள் என்பது மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் மற்றும் உப்பு நீக்கும் ஆலையிலிருந்து பெறப்படும் நீரை உள்ளடக்கிய இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் El Nino போன்ற பருவநிலை அபாயங்கள் சிங்கப்பூர் நீர்நிலைகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நமக்கு ஓரளவுக்கான தண்ணீரை வழங்கும் மலேசியாவிலும் அதன் நீர் வழிகளிலும் மற்றும் அதன் நீர் தேக்கங்களிலும் சேகரிக்கப்படும் மழையின் அளவை கூட பாதிக்கலாம் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதனால் சிங்கப்பூரில் வறட்சி ஏற்பட்டால் அதேநேரம் மலேசியாவிலும் வறட்சி ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
இந்த சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கின்ற கேள்வி இப்பொழுது எழுகிறது. பருவநிலை மாற்றங்களால் நம்முடைய நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் பொழுது புதிய நீர் ஆதாரங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி தான் நாம் உண்மையில் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதனால் மக்களுக்கான நீர் தேவையை தடையின்றி பூர்த்தி செய்ய மறுசுழற்சி செய்யப்பட்ட நீரும், உப்பு நீக்கப்பட்ட நீரும் மிக மிக முக்கியமானவை. அதே நேரம் கிடைப்பதை வைத்து மட்டும் நம்மால் திருப்தி அடைந்து விட முடியாது, தற்பொழுது இருக்கின்ற சிறந்த தொழில்நுட்பங்களில் நாம் முதலீடு செய்து அதன் மூலம் நம்முடைய நீர் வளத்தை அதிகரிக்க தினமும் உழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
சிங்கப்பூரில் இனி நாம் அமைக்கும் ஒவ்வொரு புதிய நீர் உள் கட்டமைப்பிலும் சிறந்த மேம்பாட்டை இலக்காக கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். பருவநிலை மாற்றம் என்பது சிங்கப்பூர் மட்டுமின்றி உலக நாடுகளுக்கே ஒரு சவால் என்று குறிப்பிட்ட அவர் நிகர பூஜ்ஜிய உமிழவு என்கின்ற ஒரு இலக்கை தக்க வைக்க சிங்கப்பூர் விரும்புவதால் நாம் எரிசக்தி திறனுக்கும் முன்னுரிமை கொடுத்துதான் ஆக வேண்டும் என்றார். ஆகவே நம்முடைய முதலீடுகளின் அடுத்த கட்டம் மிக மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் புதிய எரிசக்தி திறன் மேலாண்மை கருவிகளை நமக்கு வழங்கக்கூடிய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் நாம் மீண்டும் கூட்டு சேர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
