சிங்கப்பூரில் நேற்று மார்ச் 18ம் தேதி மாலையில் நூற்றுக்கணக்கான சிங்டெல் நிறுவன பயனாளர்கள் தங்களுடைய சேவையில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டு இருப்பதாக புகார்கள் அளித்தது சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. வெளியான சில புள்ளி விவரங்களின்படி நேற்று மார்ச் 18 ஆம் தேதி மாலை 5.25 மணிக்கு வெறும் 35 ஆக இருந்த சிங்டெல் குறித்த புகார்களின் இங்கு எண்ணிக்கை, அடுத்த 45 நிமிடத்தில் 500க்கும் அதிகமான புகார்கள் ஆக அதிகரித்தது. இந்த புள்ளி விவரங்களை “டவுன் டிடெக்டர்” என்கின்ற இணையதளம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. மேலும் நேற்று மாலை 6 மணி அளவில் பதிவான புகார்களில் கிட்டத்தட்ட 48 சதவீதமான புகார்கள் தங்களுக்கு மொபைல் போனில் இணைய வசதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டதலாக கூறினர்.

Singtel issue recurs – IMDA issues warning and launches investigation in Singapore.

மேலும் 24 சதவீதம் பேர் தங்களுடைய சிங்டெலில் சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என்றும் மீதமுள்ள 22 சதவீதம் பேர் தங்களுக்கு பிராட்பேண்ட் ரீதியான இணைய பிரச்சனை இருப்பதாகவும் புகார் அளித்திருக்கின்றனர். இது இந்த வாரத்தில் ஏற்படும் மூன்றாவது இடையூறு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள பல சிங்டெல் பயனாளர்கள் மிகப்பெரிய சேவை இடையூறை எதிர்கொண்டனர். அதேபோல மார்ச் 17ஆம் தேதியும் இதே பிரச்சனை நீடித்த நிலையில் நேற்று மார்ச் மாதம் 18ஆம் தேதி மாலையும் பல பயனாளர்கள் ஏதோ ஒரு வகையில் பிரச்சனையை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சிங்டெல் நிறுவனத்தின் பதில் என்ன?

இந்த இக்கட்டான சூழலில் சிங்டெல் நிறுவனம் தன்னுடைய முகநூலின் வழியாக ஒரு மிக முக்கிய அறிக்கையை நேற்று மாலை வெளியிட்டிருந்தது. அதில் “தற்காலிகமாக இணைப்பு சிக்கல்களை மக்கள் எதிர்கொண்டு வருவதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மனமார நாங்கள் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அதே நேரம் இது மற்ற இரண்டு நாட்களில் நடந்த விஷயம் போல ஒரு பெரிய நெட்வொர்க் முடக்கம் அல்ல. கடும் நெட்ஒர்க் நெரிசல் காரணமாக ஏற்பட்ட ஒரு தற்காலிக தடை தான் என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்க கடமை பட்டிருக்கிறோம். மேலும் மாலை 7.30 மணிக்குள் இந்த சிக்கல்கள் அனைத்தும் சரி செய்து முடிக்கப்பட்டுள்ளதாக” அந்த நிறுவனம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது

பயனாளர்களின் வருத்தம்..!

சிங்டெல் நிறுவனம் தன்னுடைய தரப்பில் இருந்து விளக்கத்தை கொடுத்திருந்தாலும் அந்த நிறுவனத்தின் பயனாளர்கள் பலர் தங்களுடைய 4ஜி மற்றும் 5ஜி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும். இதனால் பில் செலுத்துதல் மற்றும் வாகன முன்பதிவு போன்ற பல பிரச்சனைகளை தங்கள் எதிர்கொண்டதாகவும், குறிப்பாக அரசு ஊழியர்கள் தங்களுக்கான இணைய முடக்கம் மிகப்பெரிய சேவை முடக்கமாக மாறி இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் சிங்கை அரசன் ஒழுங்குமுறை ஆணையம், “இந்த தகவல் தொடர்பு பிரச்சனை குறித்து தங்களுக்கு தெரியும் என்றும் குறிப்பாக மார்ச் 18ஆம் தேதி ஏற்பட்ட இந்த இடையூறு குறித்த விசாரணை நடத்தப்படும் என்றும். மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடந்த பாதிப்புகள் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாகவும்”.

“ஒருவேளை சிங்டெல் நிறுவனத்தின் தரப்பில் குறைபாடுகள் இருந்தால் கட்டாயம் அந்த நிறுவனம் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் என்றும்” சிங்கப்பூர் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமான IMDA தெளிவுபட கூறி இருக்கிறது.