சிங்கப்பூரில் தேசிய விமான சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் AirlinesRating.com தளம் வெளியிட்ட இந்த 2026 ஆம் ஆண்டிற்கான உலகிலேயே மிகச் சிறந்த விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. Worlds Best Full Service Airlines என்ற பிரிவில் இந்த இடத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிடித்திருக்கிறது. அதேபோல இந்த பட்டியலில் தோகா நகரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல “கத்தார் ஏர்வேஸ்” நிறுவனம் முதல் இடத்தையும், ஹாங்காங் நாட்டின் கேத்தி பசிபிக் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. மேலும் நமது சிங்கப்பூரில் தேசிய விமான சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான Scoot உலகின் மிகச்சிறந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறது.
SIA and Scoot make Singaporeans proud – What awards did they win?
இதற்கு முன்னதாக HK Express, JetStar, Air Asia மற்றும் ஏர் பால்டிக் ஆகிய நான்கு நிறுவனங்கள் முதல் நான்கு இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த உலகளாவிய இரு பட்டியல்களில் சிங்கப்பூரின் இரண்டு முக்கிய விமான சேவை நிறுவனங்கள் டாப் 5 இடத்திற்குள் வந்திருப்பது தங்களுக்கு பெருமை அளிப்பதாக சிங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஒப்பீடு..!
இதே பட்டியல்களில் கடந்த 2025 ஆம் ஆண்டில் நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஐந்தாவது இடத்திலும் ஸ்கூட் நிறுவனம் எட்டாவது இடத்திலும் இருந்த நிலையில் தற்பொழுது நம்முடைய இரண்டு நிறுவனங்களுமே இந்த பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. AirlineRating.com தளம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்த தரவரிசையை வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த 2026ம் ஆண்டிற்கான பட்டியலுக்கு சுமார் 370 விமான நிறுவனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வு செய்யப்பட்ட தரவுகளை கொண்டு அதில் மிகச் சிறந்த விமான நிறுவனங்கள் தற்பொழுது இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியலில் இடம்பெற்று வருகிறது, குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்த மதிப்பீடு எப்படி செய்யப்படுகிறது..?
Airlineratings அமைப்பின் தலைமை நிர்வாகி பீட்டர்சன் இதுபற்றி பேசுகையில் “விமான போக்குவரத்து துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அந்த துறையிலேயே பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆய்வாளர்கள் குழு மூலமே இந்த தரவரிசை கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு விமானத்திலும் உள்ள இருக்கைகளுக்கு இடையிலான இடைவெளி. பயணிகளுக்கு அவர்களுடைய பயணத்தின் போது வழங்கப்படும் தலையணைகள் மற்றும் போர்வைகள் போன்ற வசதி, ஒவ்வொரு விமான நிறுவனமும் தங்களுடைய பயணிகளுக்கு அளிக்கும் உணவுக்கான தேர்வுகள் இப்படி பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை உண்டாக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்கள் பற்றிய ஒரு பட்டியலையும் நாங்கள் வெளியிட்டோம். ஆனால் இப்போது வெளியாகியுள்ள இந்த பட்டியல் உலகின் சிறந்த விமான நிறுவனங்களுக்கான பட்டியல் என்றும், இது பயணிகளின் பயண அனுபவத்தையும் அதில் அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும்” அவர் கூறியிருக்கிறார்.
இன்னும் பல விருதுகள்..!
ஏற்கனவே குறிப்பிட்ட இந்த விருதுகளை தவிர உலகின் மிகச்சிறந்த முதல் வகுப்பு கொண்ட விமான நிறுவனமாக முதல் இடத்தை நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிடித்திருக்கிறது. அதேபோல உலகின் மிகவும் சிறந்த எக்கானமி வகுப்புக்கு கொண்ட பிரிவில் ஏர் நியூசிலாந்து விமான சேவை நிறுவனத்திற்கு அடுத்தபடியாக நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.