நமது சிங்கப்பூரின் உணவு பொருட்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்றாலும் கூட, எதிர்வரும் காலங்களில் உணவு விலையில் மாற்றம் இருக்கும் என்று அமைச்சர் திருமதி கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான விரிவான தகவலை தற்பொழுது பார்க்கலாம். சிங்கப்பூரை பொறுத்தவரை நாம் பல பொருட்களை இறக்குமதி செய்து வருகிறோம். அது உணவுப் பொருள் என்று வரும் பொழுது கிட்டத்தட்ட 1 சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்கின்றோம். இதில் தற்பொழுது பிரச்சனைக்கு உள்ளாய் இருக்கும் “ஹர்மோஸ்” பகுதியில் உள்ள துறைமுகங்கள் வழியாக வரும் உணவு பொருட்களின் அளவு 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கின்றது.

War tensions – Food prices in Singapore may rise; minister explains.

இருப்பினும் அந்த பகுதிகளில் கடந்த பிப்ரவரி இறுதியில் இருந்து நிலவும் போர் சூழல் காரணமாக நமது சிங்கப்பூரில் உணவுப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ கடந்த மார்ச் 18 ஆம் தேதியன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். வெறும் ஒன்றுக்கும் குறைவான சதவீதமே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நமக்கு பெறப்படுவதால் உணவு பொருளின் அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றாலும் கூட, அதனை போக்குவரத்து செய்து இங்கு விநியோகிக்கும் நிறுவனங்கள் தற்பொழுது போர் பதற்றம் காரணமாக அந்த விநியோக சங்கிலி விலையை உயர்த்தி இருப்பதால் அது நம் உணவுப் பொருள்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் என்று வரும் பொழுது ஆரஞ்சு பழங்கள் எகிப்திலிருந்தும், எலுமிச்சை பழங்கள் துருக்கியிலிருந்தும், பேரிச்சம் பழங்கள் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்தும் நமக்கு வருகின்றது. ஆகவே இதுபோன்ற பொருட்களின் அளவு நமக்கு கணிசமாக கிடைத்தாலும், இவற்றை போக்குவரத்து செய்யும் விநியோக சங்கிலி நிறுவனங்கள் அதற்கான கட்டணங்களை உயர்த்தி உள்ளதால் மேற்கூறிய உணவுப் பொருட்களின் விலையும் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் போரின் காரணமாக தொடர்ச்சியாக ஹார்மோஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி வருவதால் அங்கிருந்து நாம் பெறுகின்ற உரங்களின் விநியோகமும் பாதிக்கப்படக்கூடும். காரணம் உலக அளவில் மத்திய கிழக்கு நாடுகள் தான் உர உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஒரு அசாதாரண சூழலால் உரங்களின் விலையும் உயரக்கூடும் மற்றும் அது நேரடியாகவே விவசாயம், கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். எண்ணெய் மற்றும் எரிவாயு விலையேற்றம் காரணமாக ஏற்கனவே சமையல் எரிவாயுவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது என்றும், இவை அனைத்தும் இணைந்து நமது சிங்கப்பூரில் உணவு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உரங்களின் விலையும், தீவனம் போன்ற மற்ற இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் பொழுது சிங்கப்பூரிலேயே மீன்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சந்தையில் மீன் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து “The Fish Farmer” நிறுவனத்தின் திரு. மால்கம் பேசுவையில் தனது பண்ணைக்கான மீன் தீவனங்களை பெரும்பாலும் மலேசியா மற்றும் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்வதாகவும், ஆனால் எரிபொருள் விலை அதிகரிப்பதால் எங்களுக்கான உற்பத்தி செலவும் உயர்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் தற்போதைக்கு நாங்கள் மீன்களின் விலையை உயர்த்தவில்லை ஆனால் இந்த செலவுகளில் தொடர்ந்து அதிகரிப்பு இருந்தால் அதனை நிறுவனங்களால் தாங்க முடியாது அது விலையேற்றத்தில் தான் சென்று முடியும் என்றும் கூறியிருக்கிறார்.