சிங்கப்பூர் சைனா டவுன் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள வைரத்தை திருடியதாக கூறப்படுகின்ற வழக்கில் 30 மற்றும் 42 வயதுடைய இரண்டு நபர்கள் நேற்று ஜூன் மாதம் 19ஆம் தேதி சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“Jewellery shop in Singapore’s Chinatown” – Diamonds worth S$235,000 stolen; two suspects arrested at Changi Airport.
இன்று ஜூன் 20ம் தேதி காலை சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி நேற்றைய தினம் மதியம் சுமார் 3.40 மணியளவில் சிங்கை சைனா டவுன் பகுதியில் உள்ள Kreta Ayer சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து வைரம் ஒன்று திருடப்பட்டதாக அவசர அழைப்பு தங்களுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனடியாக சிங்கப்பூர் மத்திய காவல்துறை பிரிவினர் மற்றும் சிங்கப்பூர் காவல் செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
கல ஆய்வுகளும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளும் உடனடியாக ஆராயப்பட்டது. அதில் 30 மற்றும் 42 வயதுடைய இரண்டு நபர்கள் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டனர். நேற்று சுமார் 4 மணியளவில் அந்த இருவரையும் தேடும் பணி தீவு முழுவதும் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் அவர்கள் நேற்று ஜூன் 19ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் வைத்து அதிரடியாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட வைரமும் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சைனா டவுனுக்கு சென்ற அந்த இருவரும் வைரங்களை வாங்குவது போல நடித்து கடைக்காரர்கள் அசந்த நேரத்தில் அந்த வைரத்தை திருடியது தெரிய வந்தது. தற்பொழுது அவர்கள் இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிடவில்லை. மேலும் நகை வாங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கடைக்காரர் வேறு ஒரு வைரத்தை இவர்களுக்கு ஆய்வு செய்து விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது தங்களிடமிருந்த போலி வைரத்தை அங்கே வைத்துவிட்டு அசல் வைரத்தை அவர்கள் திருடி சென்றது அம்பலமானது. ஆனால் அவர்கள் பொருட்கள் எதையும் வாங்காமல் உடனடியாக கடையை விட்டு வெளியேறியது கடை ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் உடனே அவர்களுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த சில நகைகளை சோதித்த பொழுது அதில் ஒரு போலி வைரம் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
உடனடியாக போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் அவர்கள் கைதாகினர். தற்பொழுது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள அவர்கள் மேல் உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
