சிங்கப்பூரில் அரசு அதிகாரிகளை போல நடித்து மோசடி செய்த மலேசியர் ஒருவர் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த மார்ச் மாத துவக்கத்தில் இருந்து இந்த ஒரு மாத காலத்திற்குள் இதே போன்ற வழக்கில் கைதாகும் 11-வது மலேசியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் காவல்துறை இது குறித்த ஒரு விழிப்புணர்வு செய்தியையும், மக்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

Mega scam by impersonating Singapore government officials – 11 Malaysians arrested in a month.

போலி சிங்கப்பூர் அதிகாரிகள்

சிங்கப்பூரை சேர்ந்த அரசு அதிகாரிகளை போல நடித்து மக்களை மோசடி செய்து அவர்களிடம் பணம் பறிப்பதாக கூறி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த ஏப்ரல் முதல் வாரம் வரை இதுவரை மலேசியாவை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி 26 வயது மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஒரு 66 வயது சிங்கப்பூர் முதியவர் இந்த மலேசிய இளைஞரின் மோசடியில் சிக்கியதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த 66 வயது முதியவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில் தான் “யூனியன் பே” நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அந்த நபர், முதியவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். மேலும் நீங்கள் எங்கள் நிறுவனத்தில் இருந்து பெற்றுள்ள குறிப்பிட்ட இந்த “இன்சூரன்ஸ் திட்டம்” மிக மிக அருமையான திட்டம், இது குறித்து கூடுதல் தகவல்கள் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால் உங்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன் என்று அந்த போலி ஆசாமி கூறியிருக்கிறார்.

இதை கேட்டதும் அதிர்ச்சியில் ஆழ்ந்த அந்த முதியவர், தான் அப்படி எந்த ஒரு காப்பீட்டு திட்டத்தையும் எடுக்கவில்லை. UnionPay நிறுவனம் பற்றி எனக்கு தெரியாது என்று மறுத்த பொழுது, அப்படி என்றால் இது ஏதோ தவறுதலாக உங்களுடைய பெயரில் காப்பீடு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை உடனடியாக நீங்கள் ரத்து செய்ய வேண்டும் ஆகவே உங்களுடைய இந்த அழைப்பை என்னுடைய உயர் அதிகாரிக்கு மாற்றுகிறேன். அவருடன் நீங்கள் கலந்தாலோசித்து இந்த திட்டத்தை உடனடியாக எந்த செலவுமின்றி ரத்து செய்து கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார். பின் அந்த அழைப்பு வேறொரு நபருக்கு சென்றிருக்கிறது, அப்போது பேசிய ஒரு நபர் தான் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த முதியவரிடம் பேசத் தொடங்கி இருக்கிறார்.

தொடர்ச்சியாக அந்த முதியவரிடம் பேசிய அந்த போலி ஆசாமி முதியவரின் தனிப்பட்ட அடையாளங்கள் திருடப்பட்டு இருப்பதாகவும், அதை வைத்து தான் இந்த போலி காப்பீட்டு திட்டம் அவருடைய பெயரில் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். மேலும் ஒரு கட்டத்தில் ஒரு பண மோசடி வழக்கின் விசாரணையில் அந்த முதியவர் இருப்பதாகவும், இந்த விசாரணை குறித்து நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கூட சொல்லக்கூடாது என்று அவரை மிரட்ட தொடங்கியுள்ளனர். மேலும் அடுத்த நாள் காலை அந்த முதியவரை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த கும்பல் அவருடைய சேமிப்பில் உள்ள அனைத்து பணத்தையும் முழுமையாக எடுத்து தாங்கள் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் வங்கி ஊழியர்கள் இந்த பண பரிமாற்றம் ஏன் நடந்தது என்று உங்களிடம் கேட்டால் அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பது வரை அந்த போலி ஆசாமி அந்த முதியவருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

பண மோசடி வழக்கில் தான் சிக்கி இருப்பதாக நம்பி அந்த முதியவரும் இரு வெவ்வேறு நபர்களிடம் மொத்தமாக 23 ஆயிரம் வெள்ளி ரொக்க பணத்தை கொடுத்திருக்கிறார். உங்களுடைய பணம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம் என்று கூறி அந்த நபர்கள் அங்கிருந்து செல்ல, குறிப்பிட்ட தேதியில் அவருக்கு அந்த பணம் திரும்ப வராததும் அவர்களிடம் இருந்து அழைப்பு வராதபோது தான் அந்த முதியவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இப்போது இந்த வழக்கில் தான் ஒரு இளைஞர் கைதாகியுள்ளனர். மேலும் போலியான அழைப்புகளை நம்பாமல், துணிச்சலாக தங்களை தொடர்புகொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.