சிங்கப்பூரை பொருத்தவரை இளையவர்கள் மத்தியில் சிங்கலிஷ் பேசும் பழக்கம் அதிகரித்து வருவதாக சில ஆய்வுகள் கூறப்படுகிறது. சிங்கலிஷ் என்பது சிங்கப்பூரில் பேசப்படும் ஆங்கில மொழி என்பது உலகறிந்ததே. இந்நிலையில் கிட்டத்தட்ட 80 சதவீத சிங்கை இளைஞர்கள் இந்த வட்டார மொழியை தங்களால் சிறந்த முறையில் பேச முடிகிறது. பிறராலும் அதை புரிந்துகொள்ள முடிகிறது என்பதனால் பணியிடங்களில் இந்த சிங்கலிஷ் பயன்படுத்துவது தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக கூறியிருக்கின்றனர். இதுகுறித்து “இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாலிசி ஸ்டடிஸ்” என்கின்ற நிறுவனம் நடத்திய ஆய்வு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது.
Singapore – Growing interest in Singlish, but is interest in the Tamil language declining?
சிங்கப்பூரை பொறுத்தவரை பெருகிவரும் மக்கள் தொகையினர் ஆங்கிலம் அல்லது சிங்கலிஷ் மொழியோடு தங்களை ஆழமாக இணைத்துக் கொண்டு வருவதாக கூறுகின்றனர். அதே நேரம் தமிழ் மொழியை தங்களுடைய தாய் மொழியாக கொண்டிருப்பவர்கள் மத்தியில் அதை பேசும் ஆர்வம் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக குறைந்து இருப்பதாகவும் இந்த ஆய்வின் மூலம் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நேற்று மே 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளரும் “IPS Social Lab” பிரிவின் தலைவரான டாக்டர் திரு மேத்யூ பேசுகையில் “சிங்கப்பூரை பொறுத்தவரை சிங்கலிஷ் என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் ஆங்கில மொழியோடு மக்கள் தங்களை ஆழமாக அடையாளப்படுத்திக் கொண்டு வருகின்றனர். இது நம் சிங்கப்பூரின் தேசிய அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுவது மிகவும் சிறந்தது. இனம், மதம் மற்றும் மொழி குறித்து கடந்த 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4,000 மேற்பட்ட சிங்கப்பூர் வாசிகளிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகளை தான் இந்த ஆய்வின் மூலம் நாங்கள் வெளியிட்டுள்ளோம்”.
“அதேபோல கடந்த 2013 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நாங்கள் நடத்திய ஆய்வுகளோடு 2024 நடத்திய ஆய்வை ஒப்பிட்டு தற்பொழுது இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுளோம்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு ஒப்பிடும் பொழுது கடந்த 10 ஆண்டுகளில் சிங்கலிஷ் பேசும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. 2013இல் 46.8 விழுக்காடாக இருந்த சிங்கலிஷ் பேசும் வழக்கம் 2024ம் ஆண்டில் 57.8 விழுக்காடாக உயர்ந்து இருக்கிறது. இது ஒரு தேசிய அடையாளமாக மாறி வருவது மிகவும் நல்லது. அதே சமயம் சில அதிர்ச்சி தரும் தகவல்களும் இந்த ஆய்வில் தங்களுக்கு கிடைத்திருப்பதாக அவர் கூறி இருக்கிறார். அதாவது தாய்மொழி பேசும் திறன் மலாய் மற்றும் சீன மக்கள் மத்தியில் சீராகவே இருந்தாலும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் மத்தியில் இந்த தாய் மொழி திறன் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமான சதவீதம் குறைந்து இருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த ஆய்வின் முடிவின்படி கடந்த 2013 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும் பொழுது சீன இனத்தை சேர்ந்தவர்கள் Mandrin பேசுவதை பெரிய அளவில் குறைத்துக் கொள்ளவில்லை அதேபோலத்தான் மலாய் மொழி பேசுபவர்களும் கடந்த 2013 முதல் 2024 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட ஆய்வில் தங்களுடைய தாய் மொழியை பேசுவதில் சீராகவே இருக்கின்றனர். ஆனால் 2013ஆம் ஆண்டு 75.4 ஆக இருந்த தமிழ் மொழி திறன் 2024ம் ஆண்டில் 68.8 ஆக குறைந்திருக்கிறது. அதாவது சிங்கப்பூரில் உள்ள தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் தமிழை சரளமாக பேச முடியவில்லை என்கின்ற ஒரு நிலைக்கு வந்திருக்கின்றனர்.
இதன் காரணமாக சிங்கப்பூர் அரசு தாய்மொழி கல்வியையும் தாய் மொழி அறிவையும், தாய் மொழி மீதான ஈடுபாட்டையும் இளைஞர்கள் குறைத்து விட கூடாது என்பதற்காக பல முன்னெடுப்புகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
