சிங்கப்பூரில் Siglap பகுதியில் இயங்கி வந்த LC நர்சிங் ஹோம் என்ற முதியோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் உரிமத்தை வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்திருக்கிறது. தொடர்ச்சியாக அந்த நர்சிங் ஹோமில் வசித்து வரும் முதியவர்கள் முறையான கவனிப்பை பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை எடுப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் நேற்று ஜூன் 29ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.
மேலும் அந்த நிறுவனத்தை கவனிக்க ஒரு இடைக்கால குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 Jalan Ulu Siglap என்ற முகவரியில் அமைந்துள்ளது தான் இந்த நர்சிங் ஹோம். Healthcare Services Act – HCSA விதிமுறைகளின் கீழ் அதனை பின்பற்றுவதில் மேற்கூறிய அந்த நர்சிங் ஹோம் கடுமையான விதி மீறல்களையும், குறைபாடுகளையும் கொண்டிருப்பதால் இந்த அதிரடி நடவடிக்கை தங்கள் எடுப்பதாக நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நமது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த முதியோர் இல்லத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதோடு அங்கு வசிக்கும் 78 முதியவர்களை பாதுகாப்பான வேறொரு முதியோர் இல்லங்களுக்கு மாற்ற தேவையான கால அவகாசத்தை கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 93 படுக்கைகள் கொண்ட இந்த நர்சிங் இல்லத்தை இயக்குவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் இந்த நர்சிங் ஹோமில் நடத்திய சில தணிக்கைகளின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளில்.. “போதிய மருத்துவ சேவை இல்லாதது, அங்கிருக்கும் முதியவர்களுக்கு அடிப்படை கவனிப்பை வழங்க தவறியது, போதிய தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்காதது” உள்ளிட்டவை அடங்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த தணிக்கை ஆய்வை தொடர்ந்து தாங்கள் விதித்த விதிமுறைகளை பெரிய அளவில் அந்த நர்சிங் ஹோம் மீதி இருப்பதாக கூறிய சுகாதார அமைச்சகம், தொடர்ச்சியாக அவர்களுடைய செயல்பாட்டை கவனித்து வந்தது. மேலும் தங்களுடைய தவறுகளை சரி செய்துகொள்ள அவர்களுக்கு கால் அவகாசமும் கொடுக்கப்பட்டது.
ஆனால் 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கண்டறியப்பட்ட அதே குறைபாடுகள் மீண்டும் இந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த தணிக்கையின் போதும் கண்டறியப்பட்டதால் தங்களது HCSA விதிமுறைகளை மீண்டும் மீறி விதிமீறல்கள் செய்யப்பட்டது என்று தெரியவந்தது. இந்த சூழலில் தான் தற்பொழுது அந்த நர்சிங் ஹோம் தொடர்ந்து செயல்பட மறுப்பு தெரிவித்து அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தகுந்த தகுதி இல்லாத பராமரிப்பு ஊழியர்களை வைத்து மருந்துகளை வழங்குதல், தவறான மருந்துகளை வழங்குதல், முதியவர்களை கட்டிப்போடும் நடைமுறைகள், படுக்கையிலேயே இருப்பதால் அதனால் ஏற்படும் புண்களினுடைய அளவு அதிகரித்து இருப்பது உள்ளிட்ட காரணிகளை கொண்டு இந்த காப்பகம் தரமற்றதாக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
