சிங்கப்பூரில் வருகின்ற ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் வார இறுதி நாட்களில் மட்டும் MRT-யின் சர்க்கிள் லைன் ரயில் சேவையின் நேரங்கள் குறைக்கப்பட உள்ளதாக நில போக்குவரத்து ஆணையம் இன்று மார்ச் 26 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது. MRT-யின் வட்டப்பாதை ரயில் சேவையில் மூன்று புதிய ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது அனைவரும் அறிந்ததே, இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் அவை திறக்கப்படுவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்காக வருகின்ற ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் மே மாதம் 17ஆம் தேதி வரை வார இறுதி நாட்களில் மட்டும் சர்க்கிள் லைன் ரயில் சேவைகள் குறைந்த அளவிலான நேரங்களில் இயக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் SMRT நிறுவனம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றது.
Singapore Circle Line passengers – Major changes coming from April 11.
லைன் மூடப்படும் நேரம்..!
ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல், சனிக்கிழமைகளில் இரவு 11 மணிக்கே ரயில் சேவைகள் முடிவடையும். அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணிக்கு தான் இந்த ரயில் சேவைகள் மீண்டும் இயங்க துவங்கும். அதாவது முதல் நாள் இரவு 11 மணிக்கு சேவைகள் மூடப்பட்டு அடுத்த நாள் காலை 9 மணிக்கு மீண்டும் சேவைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சேவை மாற்றங்களால் இயல்பாக பயணிகளுக்கு ஆகும் நேரத்தை விட 30 நிமிடங்கள் வரை அவர்களுடைய பயண நேரம் அதிகரிக்கலாம் என்றும் நில போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கின்றது. அதே சமயம் இந்த சேவை இடர்பாடால் மக்கள் பாதிக்காமல் இருக்க சில மாற்று ஏற்பாடுகளையும் தாங்கள் செய்துள்ளதாக ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஷட்டில் பேருந்து சேவை..!
இந்த ரயில் சேவை இல்லாத ஞாயிற்றுக்கிழமை காலை 5 முதல் 9 மணி வரை பயணிகளின் வசதிக்காக சில பிரத்தியேக ஷட்டில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் ரயில் பயணத்தின் போது வசூலிக்கப்படும் அதே கட்டணத் தொகையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாதிக்கப்படும் ரயில் நிலையங்களில் இருந்து இரண்டு முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி ஷட்டில் 36 : ஹார்பர் ஃபிரண்ட் மற்றும் பிஷான் நிலையங்களுக்கு இடையே 7 முதல் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதேபோல ஷட்டில் 37 : பிஷான் மற்றும் Promenade பகுதிக்கு இடையில் மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த நேர குறைப்பு அமலாகிறது?
சர்க்கிள் லைன் ஆறாவது கட்டத்தின் ஒருங்கிணைப்பு சோதனைகளை மேற்கொள்ளவே இந்த நேர குறிப்பு செய்யப்படுகிறது. காரணம் இந்த சோதனைகளை மேற்கொள்ள முழு ரயில் பாதையும் தேவைப்படும். தற்பொழுது சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதையை பலப்படுத்தும் பணிகள் முடிவடைந்த பின்னரே இந்த சோதனை ஓட்டங்கள் நடத்த முடியும் என்பதால் இந்த நேர குறைப்பு அமலுக்கு வருகிறது.