மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் நிலவும் போர், உலக அளவில் ஒரு மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த சூழலிலும் பல ஆசிய நாணயங்களுக்கு எதிராக நமது சிங்கப்பூர் டாலர் தொடர்ந்து உயர்ந்து புதிய சாதனைகளை எட்டி வருகிறது. இதுகுறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

Singapore Monetary Authority’s solid plan – Singapore Dollar strengthens against Asian currencies.

ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு மத்தியில் நடந்து வரும் போர் தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்றாலும், உலக அளவில் அதனுடைய பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட பிரச்சனை இன்றளவும் பலரை பாதித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் தான் தன்னுடைய பண வீக்கத்தை குறைக்க சிங்கை எடுத்த சில முக்கிய முடிவுகள் மிகப்பெரிய அளவில் பயனளித்து இருக்கின்றது. அதன் விளைவாக ஒரு சிங்கப்பூர் டாலர் 13,562 இந்தோனேசிய ருபியா என்ற வரலாற்று உச்சத்தை தொட்டிருக்கின்றது. இந்த 2026 ஆம் ஆண்டு துவக்கத்தில் இது வெறும் 13,000கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல வரலாறு காணாத விதமாக ஒரு சிங்கப்பூர் டாலர் இப்பொழுது 125.34 ஜப்பானிய யென் என்ற அளவை எட்டி இருக்கிறது. இதுவே ஜனவரியின் துவக்கத்தில் 121.93 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தென்கொரியாவின் வான், தைவானின் டாலர் மற்றும் இந்தியாவின் ரூபாய்க்கு எதிராகவும் சிங்கை டாலர் கணிசமான முறையில் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கை இதை எப்படி சாத்தியப்படுத்தியது?

உலக அளவில் நிலவும் ஒரு நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் சிங்கப்பூரின் நிலைத்தன்மையும் மற்றும் அதன் AAA கடன் மதிப்பீட்டு முறையும் பெரிய முதலீட்டாளர்களை இந்த போர் சூழலில் வெகுவாக ஈர்த்து இருக்கிறது. இதனால் பெரும் முதலீட்டாளர்கள் நமது சிங்கப்பூர் டாலரை பாதுகாப்பான முதலீடாக கருதி அதை பெரிய அளவில் வாங்குகின்றனர். பொதுவாக அமெரிக்க டாலர், இங்கிலாந்தின் பவுண்டு போன்றவற்றில் வர்த்தகம் செய்யும் பொழுது தொடர்ச்சியாக அதனுடைய மதிப்பு ஏறும் பொழுது முதலீட்டாளர்களுக்கான லாபமும் அதிகரிக்கும். ஆனால் தற்போது உள்ள நிச்சயமற்ற சூழலில் அமெரிக்க டாலரை காட்டிலும் சிங்கப்பூர் டாலர் மீதான ஆர்வம் முதலீட்டாளர்களுக்கு அதிகரித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.

மேலும் சிங்கப்பூரின் நாணய ஆணையம் பண வீக்கத்தை கட்டுப்படுத்த நமது சிங்கப்பூர் டாலரின் மதிப்பை அதிவேகமாக உயர்த்த அனுமதிக்கப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் டாலர் எப்படி நிர்வாகிக்கப்படுகிறது அதனுடைய மதிப்பை எப்படி உயர்த்த முடியும்?

உலகின் பிற நாடுகளைப் போல அல்லாமல் சிங்கை தன்னுடைய வட்டி விகிதங்களை மாற்றாமலேயே தன்னுடைய பண வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. அதாவது சிங்கப்பூர் தனது முக்கிய வர்த்தக நாடுகளின் நாணயங்களோடு ஒப்பிட்டு ஒரு குறுகிய எல்லைக்கு சிங்கப்பூர் டாலரின் மதிப்பை உயர்த்தி அல்லது குறைத்து தன்னுடைய நாணயம் பணம் வீக்கம் அடையாமல் இருப்பதை நமது சிங்கப்பூர் நாணய ஆணையம் உறுதி செய்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக நமது சிங்கப்பூர் டாலர் இப்போதுவரை வீழ்ச்சி அடையவில்லை என்பதே இதற்கு சான்று. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிலவிய பொழுதும் அமெரிக்க டாலருக்கு எதிரான சிங்கப்பூர் டாலர் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஆசிய நாணயங்களோடு ஒப்பிடும்போது இது மிக மிக குறைவு.

ஆனால் சிங்கப்பூரின் இந்த நடவடிக்கையால் உள்ளூர் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றாலும், சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறையக்கூடும். காரணம் அவர்களுக்கு சிங்கை அதிக விலை கொண்ட நாடாக தோன்ற 100% வாய்ப்புகள் உள்ளது.