சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் எரிசக்தி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதால் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் இருந்தும், ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு சலுகைகள் மற்றும் பிற போனஸ் வழங்குவதை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான சில அதிகாரப்பூர்வ தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Singapore – Companies affected by rising energy costs; what about employees? SNEF consultation held.
உலக அளவில் நடந்து வரும் போர் காரணமாக எரிபொருள் விநியோகமானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இது எரிசக்தியின் விலையை உயர்த்தி சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்களை தொய்வடைய செய்திருக்கிறது. இந்த சூழலில் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் அமைப்பான SNEF ஒரு முக்கியமான ஆய்வை நடத்தி அதனுடைய முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அண்மையில் ஏற்பட்ட அமெரிக்கா மற்றும் ஈரான் இடையான போர் காரணமாக கடும் செலவு சார்ந்த அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாக கூறுகின்றது. அதனால் சில நிறுவனங்கள் புதிய பணியாளர்களை வேலைக்கு எடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் உள்ளிட்ட சில சலுகைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.
SNEF நடத்திய இந்த கருத்து கணிப்பில் பங்கேற்றுக்கொண்ட சிங்கப்பூரில் உள்ள 96 சதவீத நிறுவனங்கள் எரிபொருள் விலையேற்றத்தால் தங்களுடைய இயக்க செலவுகள் முன்பு இருந்ததைவிட பல மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்திருக்கின்றன. காரணம் எரிசக்தியின் விலை உயர உயர, நிறுவனங்களுக்கு தேவைப்படும் மின்சாரம், மூலப் பொருட்கள் மற்றும் சரக்குகளை கையாளும் விதத்தில் பெரிய அளவில் செலவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற சுமார் 19% நிறுவனங்கள் தங்களுடைய இயக்க செலவு 25 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளன. மேலும் பல பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு 11 முதல் 25 சதவீதம் வரை செலவு அதிகரித்திருப்பதாகவும், சில குறு மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு 10 சதவீதத்திற்கும் குறைவான அளவு செலவு அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவு கூறுகின்றது.
இந்த செலவுகள் அதிகரித்து இருப்பதால் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நிலை ஏற்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள சுமார் 83 சதவீத நிறுவனங்கள், ஏற்கனவே தங்களிடம் பணியாற்றி வரும் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்த துளி கூட எண்ணம் இல்லை என்றும், ஆனால் இந்த எரிசக்தி விலையேற்றத்தால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்க புதிய பணியாளர்களை எடுப்பதில் தாமதம் ஏற்படும் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு புதிய பணியாளர்களை எடுப்பதை நிறுத்தி வைக்க இருப்பதாகவும் கூறியுள்ளன. அதே நேரம் ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் போன்ற சில சலுகைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் ஏற்கனவே தங்களை நம்பி பணியாற்றி வரும் ஊழியர்களை காக்க இதுதான் சரியான முடிவாக இருக்கும் என்றும் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
சுமார் 20 சதவிகித நிறுவனங்கள் தங்களுடைய செலவுகளை குறைக்க பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தாமல் அவர்களுடைய வேலை நேரத்தை குறைத்துள்ளன. 25 சதவீத நிறுவனங்கள் போனஸ் மற்றும் இதர சலுகைகள் வழங்குவதை குறித்துள்ளன. மேலும் 33 சதவீதமான நிறுவனங்கள் தங்களுடைய கம்பெனியிலிருந்து ஒரு ஊழியர் தானாகவே வெளியேறும் பொழுது, அந்த இடத்தை நிரப்பாமல் தற்போதைக்கு அப்படியே விட்டு வைக்கின்றனர். மேலும் 33 சதவீத நிறுவனங்கள் ஏற்கனவே தங்களிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிப்பது நல்லது அவர்களை வேறு பணிக்கு மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்கிறது அந்த ஆய்வு.
அதனால் எதிர்வரும் 6 முதல் 12 மாதங்களுக்கு தங்களுடைய வணிக சூழல் என்பது வழக்கத்திற்கு மாறாக எதிர்மறையாகவே இருக்கும் என்று கிட்டத்தட்ட 40 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன. இதனால் சிங்கை அரசிடம் இருந்து தங்களுக்கு வரிச்சலுகைகள் அல்லது நிதி உதவி கொடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று கிட்டத்தட்ட 83 சதவீத நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.