சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மோசமாக கையாளப்பட்டதாக வெளியான வீடியோவிற்கு SATS நிறுவனம் மன்னிப்பு கூறியிருக்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருக்கிறது.

சிங்கப்பூரை மட்டுமல்ல இந்த உலக மக்களையே வியப்பில் ஆழ்த்தி வரும் ஒரு விமான நிலையம் தான் சாங்கி விமான நிலையம். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை சிறந்து விமான நிலையம் என்ற பட்டத்தை நமது சாங்கி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக 2030ம் ஆண்டுக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள அதன் டெர்மினல் 5 உலக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் நமது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரைவழி சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான சாட்ஸ் தனது ஊழியர் ஒருவர் பயணிகளுடைய லக்கேஜ்களை கன்வேயர் பெல்ட்டில் தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறது.

Singapore Changi – Staff threw passengers’ baggage; SATS company apologises.

நேற்று செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி இதுகுறித்து சாட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் அந்த வீடியோவில் காணப்படுகின்ற ஊழியருடைய நடத்தை எங்கள் நிறுவனத்தின் சேவை தரத்தையோ அல்லது பயணிகளின் பொருட்களை நாங்கள் கையாளும் முறையையோ பிரதிபலிக்கவில்லை. ஆனால் இது எங்கள் நிறுவன ஊழியர் மூலம் நடந்ததற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்று கூறி இருக்கிறது. Eric Yoong என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான அந்த வீடியோவில் சாட்ஸ்-ன் ஊழியர் ஒருவர் “அன்கிளைன்ட் லக்கேஜ்” என்று கூறப்படும் கோரப்படாத பொருட்களை முறையாக அடுக்கி வைக்காமல் கன்வேயர் பெல்ட்டில் தூக்கி எறிவது பதிவாகியுள்ளது. மேலும் எந்த வகையில் இது ஏற்புடையது என்றும் அந்த பயனர் கேட்டிருந்தார்.

இந்த சம்பவம் 23ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து விளக்கம் அளித்த SATS நிறுவனம் அந்த பொருட்கள் அனைத்துமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான ரத்து செய்யப்பட்டதால், அதன் பயணிகளுடைய பொருட்கள் தற்காலிகமாக அந்த கன்வேயர் பெல்ட்டில் இருந்து அகற்றப்பட்டதாகவும். ஆனால் அதை அந்த ஊழியர் அகற்றிய முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தான் என்றும் தெரிவித்திருக்கிறது.

அதே நேரம் அந்த பைகள் விரைவாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டதனாலேயே குறுகிய காலகட்டத்திற்குள் அதை செய்து முடிக்க வேண்டும் என்று அந்த ஊழியர் அவ்வாறு செய்திருக்கலாம் என்றும் SATS தனது தரப்பிலிருந்து சில விளக்கங்களையும் மக்களுக்கு கொடுத்திருக்கிறது. மேலும் பணி நிமித்தமாக அவர் அப்படி செய்திருக்கலாம் என்றாலும் அது தவறுதான் தற்பொழுது அந்த ஊழியருக்கு தகுந்த அறிவுரைகளும் (அது போன்ற நேரங்களில்) ஊழியர்களுக்கு உதவ கூடுதல் உதவியாளர்களும் வழங்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இது இனி நடக்காது என்று கூறி உறுதியளித்து தன்னுடைய மன்னிப்பை கூறியிருக்கிறது SATS நிறுவனம்.