சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாக அரசு அதிகாரிகள் போல நடித்து மக்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை தொடர்ச்சியாக பொது மக்களை எச்சரித்து வருகிறது. இந்த சூழலில் சட்ட அமைச்சக அதிகாரிகளை போல நடித்து, பல மக்களை ஏமாற்றிய கும்பல் கிட்டத்தட்ட 8.5 மில்லியன் வெள்ளி அளவிலான பணத்தை சுருட்டி உள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை அறிவித்திருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Scam using the Ministry of Law’s name – Singapore police alert the public.

சிங்கப்பூரில் இந்த 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சட்ட அமைச்சக அதிகாரிகள் இன்று நடித்து பொதுமக்களிடம் குறைந்தபட்சம் 8.5 மில்லியன் டாலர்கள் சுருட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிப்ரவரி முதல் இந்த ஏப்ரல் மாத காலகட்டம் வரை கிட்டத்தட்ட 98 புகார்கள் இது சம்பந்தமாக பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் சட்டத்துறை அதிகாரிகளை போல பொது மக்களை தொடர்புகொள்ளும் இவர்கள் பெரிய அளவில் மோசடி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

எப்படி ஏமாற்றுகிறார்கள்?

முதலில் பாதிக்கப்படுபவர்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து அலைபேசி அழைப்புகள் வருகின்றது. அல்லது மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக சில செய்திகள் வருகின்றது. அதில் உங்களுடைய பெயரில் அங்கீகரிக்கப்படாத பேங்க் பாஸ்புக் அல்லது வேறு சில ஆவணங்கள் இருப்பதாக கூறி, அதை உடனடியாக கேன்சல் செய்ய சட்ட அமைச்சக அதிகாரிகளை உடனே நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அந்த குறுஞ்செய்தியில் கூறப்படுகிறது. இதை மக்கள் நம்பிவிடும் நிலையில் அவர்களுக்கு வரும் அழைப்பில் உயர் அதிகாரி போல ஒருவர் பேசுகின்றார். அதில் சட்ட அமைச்சகத்தின் அதிகாரிகளை போல நடிக்கும் அந்த மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒரு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டதாலேயே அவர்களுடைய பெயரில் போலி வங்கி பாஸ்புக் அல்லது வேறு சில ஆவணங்கள் இருப்பதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

மேலும் உங்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் அதனால் உங்களிடம் உள்ள பணத்தை பாதுகாப்பாக அரசின் வேறொரு கணக்கிற்கு மாற்றுங்கள். விசாரணை முடிந்த பிறகு அந்த பணம் உங்களை சேரும் என்று மிரட்டி பணத்தை பெற்று மக்களை ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது. சில நேரங்களில் ஒரு படி மேலே சென்று மக்களை பயமுறுத்த சட்ட அமைச்சக அதிகாரிகள் பயன்படுத்தும், சில முக்கிய ஆவணங்களை போன்ற போலியான ஆவணங்களை தயாரித்து மக்களை இந்த கும்பல் மிரட்டி பணம் பறித்து வருகிறது என்பது தான் கொடுமையின் உச்சம். ஆனால் சட்ட அதிகாரிகள் ஒரு தனிநபரை எப்பொழுதும் அலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ தொடர்புகொள்ள மாட்டார்கள். மேலும் ஆன்லைனில் பணம் அனுப்ப ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் ஆகவே மக்கள் தயவு செய்து இது போன்ற போலியான அழைப்புகளை நம்பி தங்களுடைய பணத்தை பறிகொடுக்க வேண்டாம் என்று சிங்கப்பூர் போலீசார எச்சரித்துள்ளனர்.

இது போன்ற பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் சிங்கையன் Scam Shield எண்ணான 1799 என்ற எண்ணில் உடனடியாக அழைத்து புகார் அளிக்கவும் போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.