சிங்கப்பூரில் பெடோக் சென்ட்ரல் பகுதியில் அண்மையில் மூன்று புதிய காச நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் தீவிரமான சோதனைக்கு அப்பகுதியில் உள்ள மக்களை உட்படுத்த சிங்கப்பூர் நோய் தடுப்பு ஆணையம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

கடந்த சில மாதங்களாகவே சிங்கப்பூரில் காச நோயால் பாதிக்கப்படும் நபர்களின் அளவு சற்று கூடி வருவதால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு மேற்கொண்டு வந்தது. இந்த சூழலில் பெடோக் சென்ட்ரல் பகுதியில் தற்பொழுது மூன்று புதிய காச நோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று வருபவர்கள் அல்லது அங்கு நீண்ட நேரம் இருப்பவர்கள் கட்டாய மற்றும் தன்னார்வ பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று தற்பொழுது சிங்கப்பூர் நோய் தடுப்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Heartbeat @ bedok
Block 216 bedok food market
Singapore Pools Bedok Betting centre

மேலே குறிப்பிட்டுள்ள இந்த இடங்களில் தான் அந்த காச நோய்க்கான தொற்று கண்டறியப்பட்டது என்பதனால் இந்த பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்தவர்கள் அல்லது அப்பகுதியின் அருகே வசிப்பவர்கள் கட்டாயம் சிங்கப்பூர் தொற்றுநோய் முகமையை அணுகி சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து தொற்றுநோய் முகமை வெளியிட்டுள்ள ஒரு தகவலின்படி வரும் மே நான்காம் தேதி முதல் மே ஏழாம் தேதி வரை HeartBeat@bedok பகுதியில் இந்த சோதனை நடைபெறும் என்றும் மேலே குறிப்பிட்ட அந்த மூன்று இடங்களுக்கு அருகில் பணி செய்பவர்கள் அல்லது அங்கு வசிப்பவர்கள் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது

அதே போல கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து இந்த இடங்களுக்கு அடிக்கடி சென்று வந்தவர்கள் அல்லது நீண்ட நேரம் அங்கு இருந்த பொதுமக்களும் நாமாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், முன்கூட்டியே இந்த காசநோய் இருப்பதற்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டால் அதனை போக்குவது மிக எளிது என்றும் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த சோதனைகளைப் பொறுத்தவரை முதலில் மக்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படும். அந்த எக்ஸ்ரேவில் உடல் நிலை இயல்பாக இருந்தாலும் அவர்களுக்கு “லேடன் டிபி” எனப்படும் மறைந்திருக்கும் காசநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் கூட இருக்கலாம்.

இது பொதுவாக பெரிய அளவில் அறிகுறிகள் எதையுமே காட்டாது. அதே நேரம் இவர்கள் மற்றவர்களுக்கு தொற்றையும் பரப்ப மாட்டார்கள். இருப்பினும் எதிர்காலத்தில் அவர்களுடைய நோய் தீவிரமடைய வாய்ப்புகள் இருப்பதால் எக்ஸ்ரேவில் நல்ல முடிவு வந்தாலும் அவர்கள் அடுத்தடுத்த சோதனைகளை மேற்கொள்வது நல்லது என்கிறது அரசு.