அண்மையில் சிங்கப்பூரின் புக்கிட் பாடோக் பகுதியிலிருந்து சலவை இயந்திரத்திற்குள் ஒரு அரிய வகை எறும்புண்ணி சிக்கிக் கொண்டதாக மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற மீட்பு படையினர் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அந்த அரிய வகை சுந்தா எறும்புண்ணியை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் அழியும் ஆபத்தில் உள்ள அந்த அரிய வகை விலங்கு மீண்டும் காட்டுப் பகுதிக்குள் விடப்படுவதற்கு தயாராக உள்ளது என்று சிங்கப்பூரின் விலங்கு நல ஆராய்ச்சி மற்றும் கல்விச் சங்கம் (ACRES) கடந்த ஜூன் நான்காம் தேதி வெளியிட்ட தனது பேஸ்புக் பக்க பதிவில் தெரிவித்து இருக்கிறது.
நடந்தது என்ன?
கடந்த மே 25ஆம் தேதி காலை புக்கிட் பாடோக் பகுதியில் ஒரு சலவை இயந்திரத்திற்குள் ஒரு எறும்புண்ணி சென்றுள்ளது. இயந்திரத்தின் அடியில் ஏதோ ஒரு விலங்கு சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குடியிருப்பாளர், உடனே ACRES நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த தகவலை கூறுகிறார். உடனே பதில் அளித்த அதிகாரிகள் தயவு செய்து இயந்திரத்தை ஆன் செய்ய வேண்டாம் என்றும், உடனடியாக அங்கு தங்களுடைய அதிகாரிகள் வந்து சேருவார்கள் என்றும் அறிவித்திருந்தது.
பொதுவாக இவ்வகை எறும்புண்ணி ஒரு பரப்பின் மீது மிகவும் பலமாக பற்றிக்கொள்ளும் உடல் அமைப்பையும் தன்மையையும் கொண்டவை. இதனாலேயே அதை மீட்கும் பணி தாமதமானது, கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு பிறகு அந்த சலவை இயந்திரத்தில் இருந்து எந்தவித காயமும் இன்றி அந்த விலங்கு பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையின் பொழுது அந்த குடியிருப்பாளர்களும் பெரிய அளவில் ஒத்துழைப்பு வழங்கியதாக ACRES நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதற்கு முன்னதாக சலவை இயந்திரங்களில் இருந்து பாம்புகளை கூட நாங்கள் மீட்டு இருக்கிறோம். ஆனால் இப்படி உடல் முழுவதும் செதில்களாகக் கொண்ட ஒரு பிராணியை மீட்பது இதுவே முதல்முறை என்றும் அதிலும் குறிப்பாக இது ஒரு அரியவகை விலங்கு என்பதனால் துளிகூட அதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நாங்கள் அந்த மீட்பு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.
சிங்கப்பூரில் உள்ள உடும்புகள் மற்றும் பாம்புகள் போல தான் இந்த சுந்தா எறும்புண்ணிகளும் தங்களை பாதுகாத்துக் கொள்ள அல்லது பிற ஜீவராசிகளிடமிருந்து ஒளிந்துகொள்ள சிறிய இடைவெளி உள்ள இடுக்குகளை தேடுகின்றன. ஆனால் குடியிருப்பு பகுதிகளில் அப்படி ஒரு பகுதிக்குள் அது நுழையும் பொழுது அதை மீட்பது சிக்கலாக மாறுகிறது. மேலும் இந்த எறும்புள்ளி அருகில் உள்ள இயற்கைப் பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்றும், அது தற்போது இயற்கையில் வெளிவிட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
