சிங்கப்பூரில் சுமார் 38 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை உரிய உரிமம் இல்லாமல் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்த வழக்கில் ராஜு கிருஷ்ணமூர்த்தி என்கின்ற 45 வயது இந்தியர் சிங்கை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த வழக்கு குறித்து இந்த பதிவில் முழுமையாக.

சிங்கப்பூரில் 38 மில்லியன் டாலர், அதாவது சுமார் 240 கோடி இந்திய ரூபாய் அளவிலான பணத்தை உரிமம் இன்றி எல்லை கடந்து பண பரிமாற்றம் செய்து வந்த குற்றத்திற்காக இன்று ஏப்ரல் 24ஆம் தேதி 4 குற்றச்சாட்டுகள் ராஜு கிருஷ்ணமூர்த்தி என்கின்ற 45 வயது இந்திய நாட்டவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. பணத்தை முறையான அனுமதி பெறாமல் பண பரிமாற்றம் செய்தது மற்றும் முறையான வொர்க் பாஸ் இல்லாமல் சிங்கப்பூருக்குள் சுயதொழில் செய்யும் ஒரு வெளிநாட்டவராக வசித்து வந்தது என்று மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அதேபோல அவருடைய வொர்க் பர்மிட் விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளிக்க அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட மற்றொரு இந்திய நாட்டவர் மீதும் தற்பொழுது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜுவின் கூட்டாளியாக கருதப்படும் அந்த 33 வயது இந்திய நாட்டவரும் ராஜுடன் இணைந்து இன்று ஏப்ரல் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார். இவர்கள் இருவர் மீதான வழக்கின் விசாரணை இன்று முதல் துவங்குகிறது.

நடந்தது என்ன?

இன்று ஏப்ரல் 24 ஆம் தேதி ராஜுவின் வழக்கில் நீதிமன்றம் வெளியிட்ட ஆவணங்களின்படி கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் முறையான வேலை அனுமதியோ அல்லது சுய தொழில் செய்ய தேவையான பர்மிட்டோ இல்லாமல் ராஜு சிங்கப்பூருக்குள் தொழில் செய்து வந்திருக்கின்றார். அதே நேரம் சிங்கப்பூரை தாண்டி பண பரிமாற்றம் செய்ய அவருக்கு உரிய உரிமம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த முறையற்ற பண பரிவர்த்தனை மூலம் சுமார் 38 மில்லியன் அளவிலான பணத்தை அவர் கையாண்டிருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை தகவல் அளித்திருக்கிறது. சிங்கப்பூருக்குள் சுயதொழில் செய்யும் ஒரு வெளிநாட்டவராக இருந்த பொழுதிலும் அதற்கான அனுமதி பெறாமலேயே அவர் இங்கு செயல்பட்டு வந்திருக்கிறார்.

மனிதவள அமைச்சகத்திடம் அவர் கொடுத்த ஆவணங்களும் போலி என்பதும் இப்போது தெரியவந்திருக்கிறது. மனித வள அமைச்சகமும் அவர் மேல் வழக்கு தொடுத்துள்ள நிலையில் “பேமெண்ட் சர்வீசஸ் ஆக்ட்” எனப்படும் சிங்கப்பூரின் பண பரிமாற்ற சட்டத்தின் கீழும் அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் ராஜு மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அதிகபட்சமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.