சிங்கப்பூரில் பணியாற்ற நினைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறிப்பாக கட்டுமானத்துறையில் பணியாற்ற தயாராக இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மிக மகிழ்ச்சிகரமான செய்தியை இன்று ஏப்ரல் 30-ஆம் தேதி சிங்கை அரசு வெளியிட்டு இருக்கிறது அது குறித்த முழு விவரத்தை தற்பொழுது காணலாம்.
சிங்கப்பூரை பொறுத்தவரை அதனுடைய வானுயிர கட்டிடங்களை, அழகிய நகர அமைப்புகளை, ரயில்வே துறைகளை செம்மையாக உருவாக்கியதில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு என்பது மிக மிக பெரியது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு உண்மை. இந்த சூழலில் தற்பொழுது சிங்கையில் நிலவிவரும் மிகப்பெரிய கட்டுமான தேவையை கருத்தில் கொண்டு வருகின்ற 2027 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு ஊழியர்களை, சிங்கையில் கட்டுமானத்துறையில் வேலைக்கு அமர்த்துவதில் சில தளர்வுகளை அறிவிக்க உள்ளதாக நமது சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி துறை அமைச்சர் Chee Hong Tat தெரிவித்திருக்கிறார்.
இனி தேர்வுகள் சிங்கையில் நடத்தப்படும்..
வருகின்ற ஜனவரி 2027 முதல் சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளில் இருந்து புதிதாக கட்டுமானத்துறையில் பணியாற்ற சிங்கப்பூருக்கு வர நினைக்கும் ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் வருவதற்கு முன்னதாக தங்கள் சொந்த நாட்டில் மேற்கொள்ள வேண்டியிருந்த திறன் சான்றிதழை இனி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், அந்த திறன் சான்றிதழுக்கு பதிலாக அவர்கள் சிங்கப்பூருக்கு வந்த பிறகு அவர்களின் தொழில் அறிவு மற்றும் செய்முறை திறன்கள் சோதித்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
அதே நேரம் தற்பொழுது இந்த ஊழியர்கள் தேர்வு செய்யப்பட கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில் இனி ஒரு ஊழியர் தன்னுடைய சொந்த நாட்டில் வேலைக்கு விண்ணப்பித்து ஒரே மாதத்தில் அவருக்கான தேர்வு செய்யும் பணிகள் முடிவடையும் என்றும் அமைச்சர் தன்னுடைய பதிவில் தெரிவித்திருக்கிறார். 2027 ஜனவரியில் சீனா மற்றும் தாய்லாந்துக்கு அளிக்கப்படும் இந்த தளர்வு, 2028 ஜனவரி முதல் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மியான்மர் போன்ற பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏன் இந்த மாற்றம்?
சிங்கப்பூர் வர நினைக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களது சொந்த நாட்டில் சான்றிதழ் பெற அதிக காலம் எடுப்பதாலும், மேலும் அங்கு அவர்கள் பெரும் திறன்கள் சிங்கப்பூரில் அவர்கள் செய்யும் வேலைக்கு ஒத்துப் போகாமல் இருப்பதாலும் அதை சரி செய்யவே இந்த புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது. அதனால் இனி அவர்களது சொந்த நாட்டில் பெறக்கூடிய பயிற்சிக்கு பதிலாக சிங்கப்பூரில் அவர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும்.
அதே நேரம் அவர்கள் பணி அனுமதிப்பெற்ற முதல் ஆறு மாதங்களுக்குள்ளாக சிங்கப்பூரில் அவர்கள் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் அப்படி பெறவில்லை என்றால் அவர்களுக்கான லெவி கட்டணம் அதிகளவில் விதிக்கப்படும். அதேபோல ஒரு வருடத்திற்கு பிறகும் அவர்கள் சான்றிதழ் பெறவில்லை என்றால் அந்த தொழிலாளரின் பணி அனுமதி புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெளிவாக கூறியிருக்கிறார்.