இன்று மார்ச் 16-ம் தேதி காலையில், சிங்க்டெல் (Singtel) வாடிக்கையாளர்கள் சிலர் சேவைத் தடையைச் சந்தித்துள்ளனர். இன்று காலை 10:51 மணி நிலவரப்படி, சிங்க்டெல் பயனர்களுக்கு ஏற்பட்ட இணையச் சேவைத் தடை குறித்து 5,200-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியிருந்ததாக ‘டவுன்டிடெக்டர்’ (Downdetector) தரவுகள் தெரிவித்துள்ளது. பல்வேறு தளங்களிலிருந்து பெறப்படும் நிலை அறிக்கைகளைத் தொகுப்பதன் மூலம், சேவைத் தடைகளை டவுன்டிடெக்டர் கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் சில நிமிடங்களிலேயே, காலை 11:01 மணிக்கு, டவுன்டிடெக்டரில் பதிவான புகார்களின் எண்ணிக்கை 5,804-ஐ எட்டி உச்சத்தை அடைந்தது. இதுகுறித்து பேசிய சிங்டெல் நிறுவனம், சில வாடிக்கையாளர்கள் தங்கள் அலைபேசி சேவைகளில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டிருந்ததுடன், தனது பொறியாளர்கள் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

“Service down since morning” – Singapore’s Singtel customers frustrated; when will it be fixed?

அதே நேரம் இன்று பிற்பகல் 12.01 மணியளவில் வெளியிடப்பட்ட மற்றொரு அப்டேட்டில், தனது பொறியாளர்கள் சிக்கலைக் கண்டறிந்துவிட்டதாகவும், அதனைச் சரிசெய்வதற்கான “நடவடிக்கைகள்” தொடங்கப்பட்டுவிட்டதாகவும் Singtel நிறுவனம் தனது Facebook பதிவில் தெரிவித்துள்ளது. அதே நேரம் அந்தச் சிக்கல் என்ன என்பதை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. முன்னதாக காலை 11.12 மணியளவில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியிருந்தபடியே, அலைபேசி இணைப்பை மீட்டெடுக்க உதவும் வகையில், வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களை அணைத்துவிட்டு மீண்டும் இயக்கும்படி வழங்கியிருந்த அறிவுரையை அந்நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுளதும் குறிப்பிடத்தக்கது அதே நேரம் இந்த சேவை இடையூருக்கு மன்னிப்பு கேட்பதாகவும் Singtel நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேவை முடக்கம் குறித்த புகார்கள் காலை சுமார் 10:30 மணியளவில் தொடங்கின, அப்போது 827 புகார்கள் பதிவாகியிருந்தன. பின்னர், காலை 10:43 மணியளவில், இப்புகார்களின் எண்ணிக்கை 3,869-ஆக உயர்ந்தது; அதன் பிறகே அது தனது உச்சத்தை எட்டியது. மீண்டும் காலை 11:13 மணியளவில், புகார்களின் எண்ணிக்கை 4,039-ஆகக் குறைந்தது, மேலும் 11:42 மணியளவில், அந்த எண்ணிக்கை பாதியாகக் குறைந்து 2,040-ஐ எட்டியது.
முன்னதாக, நவம்பர் 2025-இல் ஏற்பட்ட ஒரு அலைபேசிச் சேவை முடக்கம், ஆறு மணி நேரத்திற்கு Singtel வாடிக்கையாளர்களைப் பாதித்திருந்தது யாராலும் மறக்க முடியாத ஒன்று. மேலும் அக்டோபர் 2024-இல், Singtel-இன் தொலைத்தொடர்பு வலையமைப்பில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான தீவு தழுவிய இடையூறு காரணமாக, சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையின் அவசர உதவி எண்கள் மட்டுமின்றி, மருத்துவமனைகள் மற்றும் வங்கிகளின் தொலைபேசி எண்களையும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆண்டில் அக்டோபர் 8-ஆம் தேதி நிகழ்ந்த, நிலையான தொலைபேசிச் சேவை (fixed-line) முடக்கம் தொடர்பான சம்பவத்திற்காக, அத்தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 1 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது; அச்சம்பவம் 5,00,000 பயனர்களை நான்கு மணி நேரத்திற்கும் மேலாகப் பாதித்திருந்தது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் மீண்டும் இன்று இப்படி நடந்திருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்போது ஏற்பட்ட பாதிப்பு பெரிய முடக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பயனாளர்கள் பலரும் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சுமார் 27.3 சதவிகித பங்குகளை நமது சிங்டெல் வைத்திருப்பது பலரும் அறியாத உண்மை.