சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோர் மீது பண மோசடி சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மூலம் கிட்டத்தட்ட 5.3 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நமது சிங்கப்பூர் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி வரை சிங்கையின் வணிக விவகாரத்துறை மற்றும் ஏழு காவல் பிரிவுகள் இணைந்து நடத்திய ஒரு அதிரடி நடவடிக்கையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து நேற்று மார்ச் 12ஆம் தேதி சிங்கப்பூர் காவல்துறை ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் ஊடகங்களுக்கு வெளியிட்டு இருக்கிறது.
Singapore – $5.3 million lost in scams; authorities warn the public to stay alert.
தீவு முழுவதும் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் கடந்த மார்ச் 11-ம் தேதி வரை மொத்தமாக 136 ஆண்களும் 85 பெண்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 17 முதல் 81 வயது வரை உள்ளவர்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் மோசடி கும்பல்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள், அல்லது மோசடி நபர்களாகவே பணியாற்றியவர்கள் என்றும் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இப்போது விசாரணைக்கு உட்பட்டுள்ள இந்த 221 பேர் மீதும் கிட்டத்தட்ட 1080க்கும் மேற்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு ஆகிய விஷயங்களில் மக்களை இவர்கள் பெரிய அளவில் ஏமாற்றியது தெரிய வந்திருக்கிறது. அதாவது ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகர் போல ஒருவரிடம் பேசி, அவரை ஒரு செயலி அல்லது பிற திட்டங்களில் முதலீடு செய்ய வைத்து, பின் அந்த பணத்தை திருடுவது. அல்லது இணையத்தில் வேலைவாய்ப்பு தருவது போல போலியான பிம்பத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுக சிறுக பலரிடமிருந்து பணத்தைப் பெற்று, பின் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றுவது போன்ற தில்லுமுல்லு வேலைகளில் இவர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கைதானவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் புதிதாக சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி அவர்களுக்கு 6 முதல் 24 பிரம்படிகள் தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் தங்களுடைய “சிங் பாஸ்” விவரங்களை மோசடி கும்பல்களுக்கு விற்பனை செய்தவர்களும் தற்பொழுது இந்த விசாரணை வலையத்திற்குள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 12 பிரம்படிகள் வரை தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பண மோசடிகளுக்கு உதவிய நபர்களுக்கும், தங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் மூலம் மோசடி கும்பல்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவியவர்கள் பலரும் இந்த விசாரணை வலையத்திற்குள் வந்திருக்கின்றனர். ஒருவர் மோசடி செய்கிறார் என்று தெரிந்தால் அவர்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என்றும், அவர்களை குறித்து போலீசாரில் புகார் அளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அரசு எச்சரித்து இருக்கிறது.
இருப்பினும் அற்ப காசுக்காக ஆசைப்பட்டு தங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் சிம் கார்டுகள் போன்ற விவரங்களை கொடுப்பதோடு பிறரை ஏமாற்ற இந்த மோசடி கும்பல்களுக்கு அவர்கள் உதவி செய்வதன் காரணமாகவே அவர்கள் தற்பொழுது போலீசாரின் விசாரணையில் சிக்கியுள்ளனர். மேலும் பொதுமக்கள் இது போன்ற மோசடிகளை பற்றி தெரிய வரும்போது உடனடியாக ScamShield-ன் 24 மணி நேர அவசர எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது www.scamshield.com என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். அல்லது 1799 என்கின்ற எமர்ஜென்சி நம்பரையும் தொடர்பு கொள்ளலாம்.