சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் வரவிருக்கும் ஆகஸ்ட் 23ஆம் தேதி தன்னுடைய தேசிய தின பேரணி உரையை நிகழ்த்தவிருப்பதாக பிரதமரின் அலுவலகம் இன்று ஜூன் 12ஆம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த தேசிய தின பேரணி உரையானது சிங்கப்பூரில் உள்ள ITE College Central பகுதியில் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தேசிய தின பேரணி உரை என்பது சிங்கப்பூர் அடைந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் நாம் சந்திக்கவிருக்கும் சவால்கள், மேலும் நாடு எடுக்க உள்ள முக்கியமான கொள்கைகள் பற்றி சிங்கப்பூர் மக்களுக்கு அறிவிக்க பயன்படுத்தப்படும் ஒரு தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த நமது பிரதமர் லாரன்ஸ் வோங்-கின் மூன்றாவது தேசிய தின பேரணியாக இருக்கப்போகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய தேசிய தின பேரணி உரையில் நமது நாட்டின் புதிய அத்தியாயத்தை எழுத சிங்கப்பூர் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாறிவரும் இந்த உலகிற்கு ஏற்ப சிங்கப்பூர் தன்னை வடிவமைத்துக் கொண்டு எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் பல திட்டங்கள் குறித்தும் கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய தின உரையில் நமது பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்கள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதுமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் நமது சிங்கப்பூரின் உற்பத்தி திறனை ஒரு சீரான முறையில் உயர்த்த முடியும் என்றும், அதன் மூலம் நமது மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் கடந்த உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரம் சிங்கப்பூர் மக்கள் மிகப்பெரிய கனவுகளை காண வேண்டும் என்றும் அவற்றை செயல்படுத்த தினமும் உழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். சிங்கப்பூர் என்பது பல இன மக்கள் ஒன்றாக வாழும் நாடு என்பதனால் இங்குள்ள மக்கள் அனைவரும் பன்முகத்தன்மையை பேணி நாட்டை ஒரே சீராக வளர்க்க உழைக்க வேண்டும் என்று அவர் கடந்த உரையில் குறிப்பிட்டு இருந்தார்.