சிங்கப்பூரில் வெளிநாட்டில் இருந்து வந்து பணி செய்யும் ஊழியர்களின் அளவு அதிகம். கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும் துறையில் லட்சக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றி வரும் அதே நேரம், சிங்கப்பூரில் உள்ள முதியோர்களை கவனித்துக் கொள்வது தனியே இருக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்வது என்பது போன்ற வீட்டு பணிகளை செய்யவும் வெளிநாட்டிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் சிங்கப்பூரில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் டிமென்சியா எனப்படும் ஞாபக மறதி நோய் மற்றும் பராமரிப்பு உட்பட்ட சில விஷயங்கள் குறித்து சிங்கப்பூரில் பணியாற்றி வரும் 370-க்கும் அதிகமான இல்ல பணிப்பெண்களுக்கு பராமரிப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பயிற்சி குறித்து பேசிய சிங்கப்பூரில் பணியாற்றி வரும் 38 வயதான இந்தோனேசியாவை சேர்ந்த பிரியாந்தி என்ற இல்ல பணிப்பெண் தான் பணி செய்யும் வீட்டில் இருக்கும் 84 வயது முதியவரை கடந்த 14 ஆண்டுகளாக பராமரித்து வருவதாகவும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கடைத்தெருவுக்கு செல்லும் பொழுது ஒரே பொருளை மீண்டும் மீண்டும் வாங்க வேண்டும் என்று அவர் அடம்பிடித்து வருவதாகவும், இறுதியில் தான் அவருக்கு டிமென்சியா என்ற நோய் இருப்பது தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பல நேரங்களில் அவர் திடீரென பதட்டப்படுவதால் அவரை எப்படி அமைதிப்படுத்துவது என்று தனக்கு தெரியவில்லை என்று கூறிய அவர் இந்த சூழ்நிலையில் தான் இதுகுறித்து நடக்கும் சில பயிற்சி வகுப்புகள் குறித்து அறிந்தேன், தற்பொழுது அதில் பங்கேற்று பக்கவாதம் மற்றும் டிமென்சியா போன்ற உடல்நல குறைபாடு உள்ள முதியோர்களை எவ்வாறு அமைதிப்படுத்துவது மற்றும் உதவிக்கு அழைக்கும் முன்னர் அவர்களுக்கு என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பயிற்சியில் கற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறி இருக்கிறார்.

சமூக வலைதளங்கள் மூலமாக CDE எனப்படும் இல்ல பணியாளர்களுக்கான மையம் நடத்தும் இந்த பராமரிப்பு பயிற்சி வகுப்புகள் குறித்து அறிந்த பிரியாந்தி, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதில் சேர்ந்து அந்த முதியவர்களை கனிவாக எப்படி கவனித்துக் கொள்வது என்பது குறித்து அறிந்திருக்கிறார். தேசிய தொழிற்சங்க காங்கிரசின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் வீட்டு பணியாளர்களுக்கான மையம் கிட்டத்தட்ட நான்கு பராமரிப்பு திட்டங்களின் கீழ் கடந்த ஒரே ஆண்டில் 370 க்கும் அதிகமான வீட்டு பணி பெண்களுக்கு பயிற்சி அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பயிற்சி திட்டங்கள் மூலம் முதியவர்கள், குழந்தைகள் ஆகியவரை பராமரிப்பது அவசரகால முதுகுலுதவி போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது சிங்கப்பூரில் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு அவர்களுடைய பணிகள் சிறப்படைந்து அவர்கள் சம்பளம் உயரவும் வழி வகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து NTUC-ன் வெளிநாட்டு தொழிலாளர் பிரிவின் இயக்குனர் மைக்கில் பேசுகையில், சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இல்ல பணிப்பெண்கள் தங்களுடைய பணி நேரத்தில் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டிருக்கின்றது. அதேபோல முதல் முறையாக பணிக்காக சிங்கப்பூருக்கு வரும் இல்ல பணிப்பெண்கள் நலனை அறியவும் நமது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் நேர்காணலின்போது இந்த சிக்கல்கள் வெளிவந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்தும் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு பதிவு கட்டணம் என்பது 10 டாலர் மட்டுமே என்றும், பணிப்பெண்கள் அனைத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுடைய சொந்த மொழிகளிலேயே இதற்கான பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த திட்டங்களை இன்னும் பெரிய அளவில் விரிவுபடுத்தி இங்கு பராமரிப்பு பணியில் ஈடுபடும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிறந்த பயிற்சி அளிக்க நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.