சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 3 நிறுவனங்களின் இயக்குனராக செயல்பட்டு வந்த பழனி என்கின்ற சிங்கப்பூர் நிரந்தர குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர், அண்மையில் தனது இயக்கத்தின் கீழ் இயங்கும் மூன்று நிறுவனங்களையும் (முன்னறிவிப்பு இன்றி) மூடிவிட்டு, தற்பொழுது சிங்கப்பூரிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
இதனால் அந்த மூன்று நிறுவனங்களில் பணியாற்றி வந்த 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு மாத சம்பளம் பெறாமலும் திடீரென வேலையை இழந்தும் தற்பொழுது தவித்து வருகின்றனர். அந்த 400 பேரில் பெரும்பாலானோர் இந்தோனேசியா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 22ஆம் தேதி இந்த ஊழியர்கள் அனைவரும் நேரடியாக மனித வள அமைச்சக அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு நியாயம் கிடைக்கக்கோரி கோரிக்கை முன்வைத்தனர்.
உடனடியாக செயலாற்றிய மனிதவள அமைச்சகம், பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளை கடந்து ஒரு வாரமாக செய்து வருகிறது. குறிப்பாக சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் NTUC மற்றும் மனிதவள அமைச்சகம் ஆகிய இரண்டும் இணைந்து, பாதிக்கப்பட்ட 350 க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே தங்கும் இடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு 200 வெள்ளி ரொக்கமாகவும் 100 வெள்ளி வவுச்சர் வடிவிலும் கொடுத்து உதவி வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக வேலையிழந்து இருக்கும் அந்த ஊழியர்கள், மனிதவள அமைச்சகத்தால் சிறந்த முறையில் கவனிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக சிங்கப்பூரில் இருக்கும் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலை இழந்த அந்த 400 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்க ஆர்வம் காட்டி வருவதாகவும், அடுத்த வாரமே இவர்களுடைய வேலை வாய்ப்புகள் தொடங்கும் என்றும் உறுதி அளித்திருக்கிறது.
இதுகுறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் நேற்று ஜூன் 26 ஆம் தேதி பேசியிருந்த தொழில்துறை தலைவர் இங் சீ மெங்.. “பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த முறையில் உதவி அளிப்பதற்காக அவர்கள் அனைவரும் ஒரு சிறந்த தங்கும் இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை தற்பொழுது 400 காலி பணியிடங்களுடன் 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு விருப்பங்கள் வந்திருக்கின்றன”.
“மேலும் எங்களுடைய தொழிற்சங்கங்கள் கூடுதல் பரிந்துரைகளையும் அவர்களுக்காக அனுப்பி வருகின்றன என்று கூறினார். இந்த 400 பேரை தாண்டி மீதமுள்ள ஊழியர்களை, நிறுவனங்களுடன் நேரடியாக பதிவு செய்து கொள்ளவும் நாங்கள் TADC உடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும்” அவர் கூறினார். வேலை வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குகின்ற பணிகள் அடுத்த வாரமே தொடங்குகின்றன. அதனால் இந்த செயல்பாட்டின் மூலம் எந்த ஒரு வெளிநாட்டு ஊழியரும் கைவிடப்பட மாட்டார் என்பதை நாங்கள் உறுதி செய்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே ஏற்படும் இது போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சேவைகளை தொடர்ந்து நாங்கள் வழங்கி வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
